பக்கம்:கனிச்சாறு 7.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


55

என் தொடக்கமும் முடிவும்!


என்னைப் பற்றி நான் எண்ணுவ தில்லை!
முன்னைத் தமிழும் முனைப்பிலாத் தமிழரும்
இன்னும் இருப்பதால் நானும் இருக்கிறேன்!

பின்னும் ஓர் காரணம் பிழைப்பினுக் குண்டு!
தமிழும் தமிழரும் தாமுயர் வதற்கும்
அமிழ்ந்தநம் நாட்டின் அடிமை நீக்கியே
நரிமைப் பகையிடம் நான் றுகொண் டுள்ள
உரிமைமீட் பதற்குமே உயிர்வாழ் கின்றேன்!
அன்னைத் தமிழ்க்கே ஆருயிர் இயங்கலால்
என்னைப் புகழ்வதில் எள்மூக் களவும் 10
எனக்கு மகிழ்ச்சி ஏற்படல் இல்லை!

மனக்குகை எல்லாம் மறம்மண்டி யிருப்பதால்,
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் எனக்குவெற் றொலிகளே!
நெகிழ்ச்சியோ இறுக்கமோ நேர்வதங் கில்லை!
இமைப்பினில் மூச்சினில் இயங்கலில் எல்லாம்
அமைப்பும் ஆக்கமும் அவற்றின் வளர்ச்சியும்
பொதிந்து கிடப்பதால் பொருள்நினை வும்இலை!
பதிந்த பாதையில் பாதங்கள் சுமக்கும்!

ஆக்கம் தமிழ்க்கெனில் அகமகிழ் கின்றேன்!
தாக்கம் மிழ்க்கோ தமிழருக் கோஎனில் 20
உடலும் உள்ளமும் உயிரும்நோ கின்றேன்!

விடலரும் கொள்கையோ,வியன்தமிழ் ஏற்றமும்
தமிழர் உரிமையைத் தாம்பெறு வதுமே!
இமிழா துழைப்பதே என்னுடை வாழ்க்கை!
விழிப்பதில் தொடங்கிடும் வினையோ பகையினை
அழிப்பதில் முடியும்! அதுவரை இயக்கம்!

என்றுநான் பிறந்தேன்? என்றுநான் இறப்பேன்?
ஒன்றும் நினைவிலை! உயிரால் அழிவிலேன்!
என்னுடல் அழியினும் என்றும்நான் இருப்பேன்!
தின்னுவ திலை எனை, மண், மழை, தீ, வளி! 30

உண்டல் உடுத்தல் உறங்கல் தவிர்ந்ததும்
அண்ட வெளியினுள் அடக்கம் பெறுகிறேன்!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/117&oldid=1446166" இலிருந்து மீள்விக்கப்பட்டது