பக்கம்:கனிச்சாறு 7.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  79


எந்தமருத்துவமும் எடுபட வில்லை!
சொந்தமருத் துவமோ கைகளைச் சுட்டது!
அன்னையாய் மாறிய அருமைத் துணைவி
என்னை எழுந்தெழுந்து) இமைமூ டாமல்
காத்துப் பேணிக் கவலையால் உருகி
பூத்த கண்ணும் பூவாத மனமுமாய்க்
கைகால் சோர்ந்தும் உடல்நலம் கருகியும்
மெய்யிழந்து இருநாள் மேனி கிடத்தினாள்! 40
பற்பல மருந்தால் பழைவா றெழுந்தாள்!
மற்போ ராட்ட வாழ்க்கையில் இதுபோல்
அவள்பால் துன்பம் அணுகிய தில்லை!
எவ்வகைத் துயர்க்கும் இளைக்கா மனத்தவள்!
வறுமைக் கொள்ளைக்கும் வாடா உரத்தவள்!
வெறுமை வயிற்றிலும் வீழாது நின்றவள்!

இன்றுஎன் காய்ச்சலால் எல்லாரும் வாடினர்!
ஒன்றுபின் ஒன்றாய் உவகை மடிந்தது!

தலைமகள் வாடிய தவமாய் நின்றாள்!
தலைமகள் உள்ளம் துன்பினால் தவித்தது! 50
மூத்த மருமகள் கவலையுள் மூழ்கினாள்!
மாத்தமிழ் மறவன் இளமகன் மருகினான்!
செல்லப் பிறையும் மருகரும் தொய்ந்தனர்!
வெல்ல மழலைப் பெயரர் பெயர்த்தியர்
வந்து வந்துஅறை வாயிலில் நின்று
நொந்துகண் கலங்கி நொடிந்து திரும்பினர்!
புதுவையில் அருளியும் பூமனத் தேனும்
இதுசெய்தி அறிந்தும் இணையாத சூழலால்
வரவிய லாது வருந்திப் பெயரனை
விரைவின் விடுத்து நலம்பெறல் விளங்கினர்! 60

இடையொரு நிகழ்வாய்த் தொலைக்காட்சித் திரையில்
நடைபெற்ற தொருபடம் ‘முதல்மரி யாதை’!
நலங்குன்றி சிவாசி நார்பிணை கட்டிலில்
கலங்கி வருந்திக் கண்மூடிக் கிடக்கும்
இறுதிக் காட்சியை ளையமகள் கண்டு
மறுகி அழுததாய் மனைவி புலம்பினாள்!

அனல்போல் காய்ச்சலின் அந்த நிலையிலும்
முனம்இசைந் திருந்து முழுமையாய் அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/124&oldid=1446173" இலிருந்து மீள்விக்கப்பட்டது