பக்கம்:கனிச்சாறு 7.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85


63

நாட்டுப்பட எதிர்ப்புப் போராட்டம்!


நாட்டுப் படத்தைக் கொளுத்துதற் கே, ஒரு
நாளைக் குறித்தார் பெரியார்- இதைக்
கேட்டுக் கொளுத்தும் தமிழர் எல்லாம்
எந்தமிழ் நாட்டுக் குரியார்!
வீட்டுக் கொருவர் இருவர் வந்திவ்
விடுதலைப் போரில் குதிப்பீர்! - பொன்
ஏட்டுக் குறிப்பில் உங்களின் பெயரை
எவர்க்கும் முதலில் பதிப்பீர்!

முதியோர், இளைஞர், தாய்மா ரெல்லாம்
முன்வந் தே,புகழ் உண்பீர்! - ஒரு
முதியோர் எழுந்தார்! எழுந்தனர் மக்கள்!
முகிழ்த்தது தமிழகம் என்பீர்!
மதியார் தம்மை மதித்திடல் வேண்டாம்!
மக்களே போல்வர் கயவர்! - அவர்
புதியவ ரன்றே! என்றும் முளைத்த
புற்கள், செந்தமிழ் வயலில்!

அவரவர் நாட்டை அவரவர் மொழியில்
அவரவர் ஆளுதல் வேண்டும்! - இதை
எவரவர் தடுப்பவர்? மக்களின் எழுச்சி
எதையும் நொடியில் தாண்டும்!
இவரிவர் தமிழக மீட்சிக் கெழுந்தார்;
இவரிவர் உயிரைக் கொடுத்தார் - என
அவரவர் வரலா றெழுதுதற் கெழுக!
அழிவார் நம்மைத் தடுத்தார்!

உண்மைத் தமிழர் என்போ ரெல்லாம்
உணர்வால் பொங்கித் துடிப்பீர்! - உளத்
திண்மை கொள்வீர்! மாற்றார் பிணித்த
தீமை விலங்கினை ஒடிப்பீர்!
பெண்மையுந் தீங்கெனில் பெருந்தீ யாகும்!
பிறர்தருந் தீமை வேகும்! - அதன்
அண்மையில் நெருங்கிச் செய்வார் தீங்கும்
அன்றே அன்றே சாகும்!
அழைப்பார் பெரியார்! அறிவோர் வருக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/130&oldid=1446179" இலிருந்து மீள்விக்கப்பட்டது