பக்கம்:கனிச்சாறு 7.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


அறவோர், மறவோர் வருக! - இனும்
உழைப்பார் வருக! உழுவார் வருக!
ஊர்த்தொண் டாற்றுவர் வருக!
தழைப்போம் என்றே முயல்வார் வருக!
தாயர், தமக்கையர் வருக! - இதைப்
பிழைப்போம் ஆகில் இழிந்தோர் ஆவோம்!
பெரும்பயன் காண்போம் வருக!

-1958

 


64

எழுந்தது அரிமா!



(1958இல் பெரியார் சிறைமீண்டபொழுது எழுதியது.)


கூட்டைத் திறந்ததும் கடுங்குரல் எழுப்பிக்
குறுநடை போட்டதே அரிமா! - சாதிக்
கேட்டை ஒழித்திட, சிறுநரிக் கூட்டம்
கிடுகிடுத் தொடுங்கின எங்கும்!
நாட்டைக் குழப்பிடும் சாதியும் மதமும்,
நசுங்கிட வெழுந்ததே அரிமா - அதன்
பாட்டைக் கெடுத்திடும் நாய்க்குல மழிக்கப்
பெரும்படை திரண்டதே எங்கும்!

பேச்சும், துணிவும் ‘பெருந்திறல் உரனும்’
பணிவும் அதன்கை வாளாம் - அதன்
மூச்சும், வாழ்வும் முத்தமிழ்த் தொண்டாம்!
மாற்றார் அதன்முன் தூளாம்!
காய்ச்சும் வெயிற்கும், கடுங்குளிர் மழைக்குஞ்
கம்பிச் சிறைக்குமஞ் சாது! - சாதி
பாய்ச்சும் கொடுமைப் பாதையைத் தூர்க்கப்
பகலும் இரவும்துஞ் சாது !

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/131&oldid=1446182" இலிருந்து மீள்விக்கப்பட்டது