பக்கம்:கனிச்சாறு 7.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

என்றுசூ ளுற்றே எழுந்த படைக்குமுன்
நின்றுவழி காட்டி நெடுஞ்சீர் பெறுவீர்,
கொழுந்தமிழ் ஆர்க்குங் கொடிக்கீழ்ப் படுத்த
செழுந்தண் நிழலிற் சிறந்து!
-1961



66

அன்புள்ள சாத்தையா!
உங்களை யான் உள்ளுகின்றேன்!



அன்புள்ள நெஞ்சே! அறிவறிந்த நல்லுயிரே!
இன்புள்ள நற்பொருள்கள் எத்துணையோ உயிர்த்தும்
தனித்தமிழைக் கூறுங்கால் கேட்குங்கால் உள்ளம்
இனித்தவகை போலெதுவும் என்றும் இனித்ததில்லை.
அந்த இனிப்புஞ்‘சாத் தையா’வின் நாநனைந்து
வந்த மொழிச்சுவைபோல் வந்துயிரைக் கவ்வவில்லை;
ஏழையவன் உள்ளத் தெழுந்துவரும் பாவுணர்வுப்
பேழை திறந்ததுபோல், குற்றாலப் பேரருவி
உச்சித் தலைமீதே ‘ஓ’ வென் றிழிந்தது போல்,
சொற்சிலம்பங் காட்டிச் சுழிவுநெளி வூட்டியொரு
கல்போன்ற நெஞ்சுங் கசிந்துருகு மாறுயர்ந்த
சொல்லிசைக்கச் செய்யுமுங்கள் சொல்திறனை நாள்முழுதும்
கேட்டுக் கிறங்கியதும், உள்ளம் கிளுகிளுக்கப்
பாட்டுக் கொருகோடிப் பண்ணமைத்துக் கொண்டதுவும்
வாட்டமுற்றே நெஞ்சம் வதங்கிடுமுன் னோடிவந்து
கேட்டதொகை தந்தென்னைத் தாழாமல் காத்ததுவும்
நான் மறந்த பின்னை,செய் நன்றிகொன்ற பின்னை,யுடல்
ஊன்மறந்து மற்றும் உயிர்மறந்த பின்னை, அன்றோ
உம்மை மறந்திடுவேன்; ஆனால் உங்களும்
வெம்மை யுறும்படியோர் அஞ்சல் விடுத்துவிட்டேன்,
ஆங்கதற்கும் காரணமொன் றன்புடையீர் ஈங்குரைப்பேன்;
தாங்குதற்குத் தோள்தந்தீர்; தண்ணென் னுளந்தந்தீர்;
வீங்குதமிழ் நெஞ்சம்போல் வீங்கியவென் துன்பினையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/133&oldid=1446185" இலிருந்து மீள்விக்கப்பட்டது