பக்கம்:கனிச்சாறு 7.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

வௌவி யிருக்கையிலே வந்தென்முன் பட்டுவிட்டீர்.
கொட்டிவைத்த வல்லுணர்வுக் குன்றம் சிதர்ந்ததுபோல்
கட்டிவெல்லம் நீரிற் கரைந்தொன்றிப் போனதுபோல்
ஓலத்திரைமேல் ஒளிக்கற்றை வீழ்ந்ததுபோல்!
கோலக் கவின்காட்சி கொள்விழிபோல் யானொன்றி
உங்கள் முகமறியா துங்கள் நிலையறியா
துங்கள் நலமறியா துள்ளத் துணர்வறிந்தேன்.
அவ்வுணர்வும் நான்கொண்ட அன்னை மொழியுணர்வாய்ச்,
செவ்விதாய்ப், பாட்டுச் சிறப்புணரப் பெற்றுதுவாய்,
நான்கண்ட போது, நெஞ்சில் நான்பெற்ற இன்பத்தை
நான்பெற் றிருக்கின்றேன்! என்றுரைப்பார் பொய்யுரைப்பார்,
அன்புள்ள சாத்தையா! அன்றுபோ லின்றைக்கும்
துன்பமுறும் போதெல்லாம் உங்களையான் உள்ளுகின்றேன்.
பூத்த முகமும் புதுநகைப்பும் எந்தமிழைக்
காத்த திருவாயும், கைகூப்பும், நல்லுருவும்,
அங்காந்த வாயில் அமிழ்து சுரந்ததுபோல்
பொங்கித் துளும்பவைக்கும்; பூரித்த வல்லுணர்வால்
தூக்கியநற் றூவல் துவண்டுவிழ ஓர்கோடிப்
பாக்கள்முன் வந்துவிழுந் தென்னைப் பணிந்தெழுமே!
முன்னை எனைப்பெற்ற அன்னையினும் முத்தமிழ்த்தாய்
என்னை அணைத்தமிழ்தை இன்பமுற ஊட்டுவள்காண்.
ஆகையினால் நெஞ்சம் அழுங்கற்க! ‘அன்புள்ளம்
நோகையினால் வந்ததிந்த நோ’ வென்றே உள்க!
வெறுங்கை யொருவாரின் வெறுக்கையீண் டில்லை,
தருங்கை பொருள்தாரின் தருக்கைப்பெற லில்லை
தருகை யிருக்கட்டும்! தழலுள்ளம் தண்ண
வருகை தருகதன்பின் ‘வஞ்சி’பற்றிப் பேசுவோம்!
என்றுமிந் நெஞ்சத் திருப்பீர்; எளியேமும்
என்றுமங் காப்பே மினிது!
-1961

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/135&oldid=1446187" இலிருந்து மீள்விக்கப்பட்டது