பக்கம்:கனிச்சாறு 7.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


68

குத்தூசி வாழ்க!


செத்தூசிக் கொண்டுவருந் தமிழர்க் கென்று
சிறந்ததமிழ்த் தாளிகையைத் துவக்கி விட்டார்,
‘குத்தூசி’ குருசாமி! அவர்க்கெம் வாழ்த்து!
குடும்பநலம், வாழ்க்கைநலம் என்பவற்றைத்
துத்துத்தூ வெனவுமிழ்ந்து, பெரியார் பாங்கில்
தூயதனித் தொண்டரென விருந்தார்; பின்னைப்
பித்தேறி யோர்சிலரால் பிரிக்கப் பெற்றார்!
பிறந்ததினித் தனிப்பெருமை! துணிவுற் றாரே!

பழிதுறந்த அறிவோர்க்கும் பண்புள் ளார்க்கும்
பகலிரவாய் நாட்டுநலம் விரும்பு வார்க்கும்
இழிவடைந்த தமிழகத்தில் நிறைய வேலை!
எழுந்ததவர் இதழ்என்றால் தமிழர்க் கங்கே,
வழியிருக்கும்; குறியிருக்கும்; அறிவிருக்கும்!
வழுக்கிடுவார் தமக்குக்கைக் கோலிருக்கும்,
மொழியிருக்கும்; செந்தமிழ்த்தாய் முழக்கிருக்கும்;
முன்னிருக்குங் கொள்கையிலோர் வலிவிருக்கும்!

பெயர்களிலே ‘சாதி’யெனும் வாலிருக்கும்,
பெரியதிரு வுருக்களுக்கு ‘வாள்’ இருக்கும்!
துயர்வடைந்த ஏழையரை வந்து தாங்கத்
தோளிருக்கும்! அவர்க்கிரங்கும் நெஞ்சிருக்கும்!
மயர்வறவே சோர்வறவே தமிழர்க் காக
மணிமணியாய்க் கருத்திருக்கும் ‘குத்தூசி’க்கே
உயர்வுறவே நாவார மனமுமார்
ஒலியெழுப்பி வாழ்த்தளிப்போம் ‘வாழ்க’ நன்றே!
-1962

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/137&oldid=1446189" இலிருந்து மீள்விக்கப்பட்டது