பக்கம்:கனிச்சாறு 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93


69

வல்லுயிர் ஓட்டமும் உள்ளமும்
செந்தமிழ் அன்றோ!


என்னையே கட்டி யிழுத்துளம் பின்னி எழுவுணர்வை
முன்னையே கொண்டு பிணித்துயிர்மாட்டி முகிழ்த்ததமிழ்
அன்னையே! பண்டை அறக்குலச் செல்வீ! அருந்தமிழால்
நின்னையே பாடிப் புகழ்ந்திடல் ஒன்றே நெடும்பிறப்பே!

பாடிப் பரவுதல் என்னெனில் செந்தமிழ்ப் பைங்கிளியே
கூடிக் கிடந்துயிர்ச் செந்தமிழ் காத்த குலத்தினரைத்
தேடிப் பிடித்துக் கொணர்ந்திவன் சேர்த்தொளி தேய்ந்தபுகழ்
நாடிப் புதுக்கும் வகைக்குத் துணைபெறும் நாட்டமொன்றே!

நாட்டமஃ தாகிட நெஞ்செனும் நற்றமிழ் நன்
ஈட்டமும் வேறென ஒன்றிலா காரணத் தாலெமக்கே
வாட்டமே சேர்வன ஆயினும் வாடேன்; வல்லுயிரின்
ஓட்டமும், உள்ளமும் செந்தமிழ் அன்றோ!...

நின்துணை யாலே நினைநான் நினைந்து நினைந்துளத்தை
என்துணை யாக்கி இரும்பாய்த் திணித்தே எதுவரினும்
புன்துணி தூளாய்ப் பொக்கென ஊதிப் புதுப் பொலிவைத்
தென்தமிழ் மக்களும் நாடும் தெளிவுறத் தேற்றுவனே!

தேற்றுவ னேதீந் தமிழ்த்தாய் அரசே! திகைந்தநிலை
மாற்றுவ னே!மற் றயலுறு நாட்டால் மலிந்ததுயர்
ஆற்றுவ னே!முன் னெழிலின் ஒளிர்ந்துன் றணைந்தசுடர்
ஏற்றுவ னே!நின் இணையடி ஆணை இயம்பினேனே!

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/138&oldid=1446191" இலிருந்து மீள்விக்கப்பட்டது