பக்கம்:கனிச்சாறு 7.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95


71

அருட்கொடையாளர்களே!
பாவாணர்க்குப் பொருட்கொடை தாருங்கள்!


சாகின்ற தமிழ்க்குலத்தின் பழம்பெருமை
தனிச்சீர்மை எண்ணி எண்ணி
நோகின்ற நெஞ்சுடையான்; நொடிகின்ற
நிலையுடையான் தமிழ்ப் பகைக்கே,
வேகின்ற செந்தீயின் வெப்பன்னான்;
விறல் மறவன்! இளம்பயிர்க்கே
ஆகின்ற மழைபோலத் தண்ணளியால்
அருந்தமிழ்க்கே வாழ்வா னிங்கே! 1

உயிர்ப்பாடும் முக்கழகம்! உணர்வாடும்
தமிழ்க்குரிசில்! உறைந்த கட்டித்
தயிர்ப்போலும் செழுஞ் சொல்லால் மொழிப்பெருமை
காத்துவரும் தமிழ்மா வேந்தன்!
அயர்ப்பூருந் தமிழர்க்கு நினைவூட்டி
அயர்வகற்றும் தமிழ்ப்பே ராசான்!
செயிர்ப்பூரும் புலிப்பாய்ச்சால் அரிமாவின்
செந்நோக்கால் தமிழைக் காப்பான்! 2

பசித்தெழுந்த வயிறடக்கிப் பணிந்தெழுந்த
மனையாளின் விழைவ டக்கி,
விசித்தழுத மகவடக்கிச் செந்தமிழின்
பகையடக்கி, வீணர் தீங்கை
முசித்தெறிந்தான்! தமிழ்ப்பெருமை முழுதுணர்ந்தான்!
மொய்ம்புகழே அல்லால், இற்றைப்
புசித்திடவும் சோறறியான்; வாழ்ந்திடவும்
வீடறியான்; மனஞ்சோ ரானே! 3

“பூவார்ந்த முல்லைக்குத் தேரீந்தான்;
மயிலுக்குப் போர்வை ஈந்தான்;
காவார்ந்த புலம் நோக்கி வந்தார்க்குத்
தலையீந்தான் தமிழன்” என்றே
பாவார்ந்த செந்தமிழின் பாட்டார்ந்த
தமிழர்களே, பாவா ணர்க்கே
நாவார்ந்த செழுந்தமிழால் வாழ்த்துரைத்துப்
பெரும்பொருளை நல்கு வீரே 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/140&oldid=1446194" இலிருந்து மீள்விக்கப்பட்டது