பக்கம்:கனிச்சாறு 7.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


72

நாளையும் நீ வாழ்வாய்!


செந்தமிழ்சேர் நல்லுறவே! முத்தமிழ்வாழ் நெஞ்சே!
செத்திருந்த தமிழினத்தை நல்லுணர்வால் கூட்டி
எந்தமிழால் உயிரூட்டி எழுந்துலவ விட்ட
இணையற்ற பாவரசே! ஏற்றமிகு குன்றே!
தந்தபெரும் பாக்களினால் தமிழினத்தார் கொண்ட
தணிப்பறியா வேட்கையினைத் தணித்துயர்ந்த வேந்தே!
எந்தநினை வேற்பதனால் உன்நினைவு சாகும்?
எத்தனைநாட் சென்றிடினும் நினைக்கில்உளம் வேகும்!

தமிழ்க்கின்பம் சேர்த்தாயே அதையெண்ணு வோமா?
தமிழ்ப்பகைமுன் ஒருதனியாய் நின்றுமொழிப் போரைச்
சிமிழ்க்காமல் நடத்தினையே அதைநினைந்தே உள்ளம்
சிலிர்ப்போமா? செழுந்தண்வாய் தமிழ்மணக்கப் பேசிக்
குமிழ்ச்சிரிப்பால் கவர்ந்தனையே! அதனைநினைப் போமா?
குலைவதிலா வல்லுரத்தோ டுலவியவெம் புலியே!
தமிழ்ப்பொழிலே! உணர்வூற்றே! சொற்குவையே! பெய்த
தண்டமிழ்த்தேன் பாமழையே! எங்ஙன்மறப் போமே?

பெருந்துன்பம் வாய்த்திடினும் வாய்மையறம் தாழாப்
பீடுறநீ வாழ்ந்தனையே அதனைநினைப் போமா?
விருந்தென்று பெருந்தமிழை நெஞ்ச இலை இட்டு
வேண்டுமட்டும் வழங்கிய நீ, பசிதீரத் தீர
இருந்தின்னும் வழங்காமற் போயினையே அஃதை
எண்ணி எண்ணி உடலுயிரும் ஏங்கிடநிற் போமா?
அருந்துன்பம் தமிழ்மொழிக்கே வாய்த்ததடா இக்கால்!
ஆர்த்தெழுந்த இடிக்குரலோ டணையிடுவார் யாரே?

போற்றுகிலாத் தமிழரிடைத் தமிழ்போற்றி வாழ்ந்தாய்!
பொய்மாந்தர் கூட்டத்திடை மெய்ப்பணியில் ஆழ்ந்தாய்!
ஆற்றுகிலாத் தமிழர்துயர் துடைத்திடத் தொண் டாற்றி,
ஆழ்ந்தகன்ற இருளுளத்தில் தமிழ்விளக்கம் ஏற்றி,
வேற்றினத்தார் தமிழழிக்க, வெகுண்டெழுந்து நின்றாய்!
விறல்பெறவே பகைவர்தமின் உடலுயிரைத் தின்றாய்!
நேற்றிருந்தாய்; இன்றிருப்பாய்; நாளையும் நீ வாழ்வாய்!
நெஞ்சிருக்குந் தமிழினத்தின் நினைவினில் நீ ஆழ்வாய்!

-1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/142&oldid=1446197" இலிருந்து மீள்விக்கப்பட்டது