பக்கம்:கனிச்சாறு 7.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

கதிர்முன் பனியாய்க்
கனல்முன் பொறியாய்க் கனித்தமிழின்
முதிர்தீஞ் சுவைதரு
பாரதிதாசன் முழுப்புலமை
எதிர்முன் னிழிபடப்
பாடல் எழுதி இடர்ப்பட்டோர்
அதிர்வுற லுண்டுளம்
அஞ்சலு முண்டே அலமரவே! 9

அலங்கலை ஆழ்கடல்
சூழ்ந்த வியன்பொழில் ஆர்புதுவை
இலங்குயர் சீர்மிகு
பாரதிதாசன் எழில்மனத்தே
குலுங்கினள் செந்தமிழ்க்
கன்னி; குயிலெனக் கூவியுயிர்
துலங்கினள்; எந்தமிழ்
எங்கணும் பூக்கத் துணைசெயவே! 10

1966




74

பன்னாடைப் புலவர்!



இலக்கணத்துப் புலியென்பார்; இலக்கியத்துத்
தூணென்பார்; இறுமாப் புற்றுத்
துலக்கமிலா வெற்றறிவால் பிறர்தம்முன்
துகளென்பார்; தொண்டு பேணார்!
விலக்கவிலாச் சூழ்நிலையால் ஒரோவொருகால்
வினைமுடிப்பின் வியப்பார் தம்மை!
கலக்கலுறும் பன்னாடைப் புலவரிவர்;
உண்மையர்க்குக் காற்கீழ்ப் புல்லே!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/145&oldid=1446200" இலிருந்து மீள்விக்கப்பட்டது