பக்கம்:கனிச்சாறு 7.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


76

செந்தமிழ்ச் சின்னச்சாமி!


செந்தமிழ் மறவன் சின்னச் சாமி
வெந்தழல் புகுந்து வெந்தனன்; என்றொரு
செய்திவந் தெம்செவி சேர்ந்ததும் உள்ளம்
வெய்துயிர்ப் புண்டது! வெயர்த்தது உடலம்!
தமிழ்க்குயிர் துறந்த தமிழ்மகன், தன்றாய்
அமிழ்தெனும் மனைவி மக்கட் கெல்லாம்
வைத்துச் சென்ற வைப்பெலாம் புகழே!
பொய்த்துயிர் வாழும் போலியர் தமக்குச்
சின்னச் சாமியின் ஈகச் சிறப்பும்
மன்னும் புகழும் மறையா திலங்குக!
தமிழ்க்குயிர் செகுக்கும் தகைமை யாளர்
தமக்கொரு நற்சொல்; தமிழ்க்கென உயிரை
ஈதல் என்றால், எரிநெய் ஊற்றிச்
சாதல் இல்லை! சாகுநாள் வரையில்
செந்தமிழ்க் குற்ற தீமைகள் களைதலும்
வெந்துயர் தருவார் தம்மை வீழ்த்தலும்
ஆகுமே அன்றித்தாம் அழிதல் அன்று;
சாகுவர் தம்மால் தமிழ்ப்படை சாகும்!
பகைப்புலன் அறுக்கப் பதைப்பார்
வகைப்பட முயல்வதே வழியென் றறிமே!

-1968




77

அண்ணா இரங்கற் பத்து!



எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றுப்
பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே
உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்
அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர் அளவுமுண்டோ? 1

மக்களை ஈர்த்த தலைவன்; அரசியல் மாண்புணர்ந்தான்;
ஒக்கல் அவரென எண்ணி உழைத்தான்; உழைப்பிடையில்
பக்கல் இருந்தவர் நெஞ்சும் உயிரும் பதைபதைக்கப்
புக்கல் நலம்என் றுயிராய்ப் புகுந்தான் புகழுடம்பே! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/147&oldid=1446202" இலிருந்து மீள்விக்கப்பட்டது