பக்கம்:கனிச்சாறு 7.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103


பாலை நிகர்த்தது நெஞ்சம்! பனிநிகர் பைந்தமிழ்ச்சொல்!
வேலை நிகர்த்தது கூர்விழி! நீண்டு விரிந்த நெற்றி,
நூலை நிகர்த்தது; கல்லாப் பொதுநிலை மாந்தருக்கும்
சோலை நிகர்த்ததே அன்னவன் செந்தமிழ்ச் சொற்பொழிவே! 3

மட்டில் முதுமைப் பெரியார் பயிற்றிய மாணவருள்
குட்டி அரிமா எனவெளி யேறிக் குழுக்குழுவாய்த்
தட்டி எழுப்பிடு வீறுரை யால்இத் தமிழ்நிலத்துள்
கொட்டி விதைத்தவை காய்க்குமுன் ஆவி குலைந்ததுவே! 4

முந்தையர் மொய்ம்புகழ் மீளக் கொணர்ந்திட முன்னி முன்னி
வெந்துய ரோடமைச் சேற்றிந்திப் போரினில் வெற்றிகண்டு
செந்தமிழ்க் கேதகு செய்வினை முற்றுமாய்ச் செய்வதற்குள்
எந்தமிழ்ச் சேய்க்கிங் கிடர்வந்த தேஉயிர் ஏகுறவே! 5

தந்தை பெரியார் தலைப்படு போர்க்குத் தலைப்படையாய்
முந்தை அவர்வழிப் பற்றி யெழுந்த முதல்மகனாய்
எந்தை தமிழ்க்கென் றிராப்பகல் ஆற்றுமோர் ஏவலனாய்
வந்து நறும்பணி கொண்டான்; முடியுமுன் வாடினனே! 6

தமிழ்மொழிக் கென்றே தகவாம் சிலசெயல் தம்பெருமை
அமிழ்விலா வாறவன் ஆற்றலின் என்பதும் ஆமெனினும்
இமிழ்உல கெங்கும் புகழ்பெற இன்னும் இருந்திருந்தால்
தமிழ்நா டொருவா றுருப்பெறும் அன்னான் தலைமையிலே! 7

மாற்றற் கிலராய் மதமும் குலமும் வலிந்து பற்றிச்
சாற்றற் கரிதாம் இழிவுகற் பித்துச் சமவுரிமை
ஆற்றற் கணையாய் அடுத்துக் கெடுத்திடும் ஆரியரும்
போற்ற நடந்தான் அதுதான் அவன்றன் புகழ்க்குறையே! 8

அன்னை மொழிக்கும் இனத்தினுக் கும்வந்த ஆரியரால்
இன்னும் விலகாக் கொடுந்துயர் சீய்க்க எழுந்தயிவன்
முன்னை யெடுத்தநற் கொள்கைமுழுதும் முடித்திருந்தால்
பின்னை இலரென வேபெற் றிருப்பான் பெரும்புகழே! 9

பனியுங் குளிரும் வெயிலும் கருதாக் கவலையொடு
தனியுந் திறமும் பழைமையும் வாய்ந்த தமிழ்க் குழைத்துக்
கனியும் மொழியும் உணர்வும் கருத்தும் கலந்தருந்த
இனியும் வருமோ ஒருவன் இவன்போலும் எம்மவர்க்கே! 10

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/148&oldid=1446205" இலிருந்து மீள்விக்கப்பட்டது