பக்கம்:கனிச்சாறு 7.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


80

ஆசிரியப் பெருமக்கள் வாழ்க!


எண்ணங்கள் சிதர்ந்தோடி இடர்ப்படுத்தும் பருவம்;
இருக்கையிலே தொடர்ந்தமர்தற் கிணங்காத பருவம்;
வண்ணங்கள், மலர், பறவை, மாடு, ஆடு தம்மில்
மனம் வைத்துக் கல்வியிலே மனம்வையாப் பருவம்;
உண்ணற்கும் உடுத்தற்கும் உறங்குதற்கும் போக
ஒழிகின்ற நேரமெல்லாம் பள்ளிவந்து, தொல்லை
பண்ணற்கும் கற்றற்கும் வாய்த்ததொரு பருவம்;
பயிர்முளைத்து வருகின்ற பருவமன்றோ பருவம்!

அப்பருவக் குருளைகளை அடக்கி, யருள் கொண்டே
அகரமுதல் கற்பித்துக் கதை,பாடல் சொல்லி,
ஒப்பரிய கல்வியொடும் ஒழுங்கோடும் வாழ்க்கை
உயர்நெறியில் இயங்குதற்கே அடிப்படையைக் காட்டிச்
செப்பரிய தொண்டாற்றும் தொடக்கநிலைப் பள்ளிச்
சிறப்புமிகும் ஆசிரியப் பெருமக்கள் மாண்பை
எப்படியான் எடுத்துரைப்பேன்?, இவ்வுலக மாந்தர்க்
கெருவன்றோ? அறிவுதரும் இறைவர், அவர் அன்றோ?

அன்னவர்தம் வாழ்க்கையினை ஊர்பேணல் வேண்டும்.
ஆசிரியப் பெருந்தகையர்க் கரசுதவல் வேண்டும்.
சின்னவராய்ச் சிறப்பிலராய்ப் பெருமை, நலம் குன்றிச்
சீரற்ற வாழ்வினராய் அன்னவர்வாழ் கின்ற
புன்னிலையைத், தாழ்நிலையைப் போக்கிடுதல் வேண்டும்!
பூத்துவரும் உலகநலம் காத்திடுதல் வேண்டும்!
நன்னிலைக்கே அவருயர்ந்தால் நாமுயர்வோம்; கல்வி
நலம்பெருக்கும் தொடக்கநிலை ஆசிரியர் வாழ்க!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/152&oldid=1446213" இலிருந்து மீள்விக்கப்பட்டது