பக்கம்:கனிச்சாறு 7.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


83

திருக்குறள் பெருமாள்!


துருவுந் தூசியும் துவைந்த புழுதியும்
எருவுஞ் சேறும் இறுகக் காய்ந்தே,
உருளை ஓரத்தும், உட்புற அச்சிலும்,
இருகால் மிதியிலும், கம்பிகள் இடுக்கிலும்,
அடையடை யாக அப்பிக் கிடந்து, 5
கடகடத் தாடுங் கற்கா லத்துக்
கட்டை வண்டிபோல் காட்சி யளிக்கும்
குட்டை யான மிதிவண்டிக் கூடு.

அமரும் இருக்கையில் ஆயிரம் கிழிசல்!
சுமைகள் வைத்திடுஞ் சுமப்பான் ‘தொட! தொட!’ 10
கால்மிதிக் கட்டைகள் கழன்று கழன்று
சாலையில் ஆளைச் சாய்த்திடும் நாடகம்!
கிழிசல் வேட்டி ஓரத்தைச் சுருட்டி
மைசேர் பற்களால் மென்று குதப்பி
ஆளைத் தள்ளும் ‘அழகிய’ தொடரி! 15
ஏனிவ் விரைவென இடையிடை மடங்கி
ஊன்றிக் கொள்ளும் ஒற்றைக்கால் தாங்கி!
கணகணக் காத கருந்தலைப் பருமணி!
தொணதொணக் கின்ற தொடரிச் சக்கரம்!
உராய்ந்து கிரீச்சிடும் நெளிந்த உருளைகள்! 20
மரமரக் கின்ற மண்பொதி தடைகள்!

இத்தகு பெருமையோ டெவ்விடத் தாகிலும்
தத்தட தடவெனும் மிதிவண்டி ஒன்று
சாய்ந்த நிலையில் சாலையோ ரத்துக்
காய்ந்த உடலொடு காண்பீ ராயின் 25
அந்த வண்டிதான் திருக்குறள் பெருமாள்
சொந்த வண்டி,எனச் சொல்லுக துணிந்தே!

அந்த வண்டிக்கு அண்மையில் உள்ள
சந்திலோ பொந்திலோ சாலைக் கடையிலோ
எங்கோ தான்அவர் இருந்திடல் வேண்டும்! 30

இங்கவர் தோற்றம் எப்படி என்றால்,
இயம்பிடு கின்றேன் மனத்தில் இறுத்துக;
நயம்படும் அவர்புகழ் நாற்புறம் நாட்டுக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/155&oldid=1446217" இலிருந்து மீள்விக்கப்பட்டது