பக்கம்:கனிச்சாறு 7.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


84

அண்ணாமலைநகர் அதிர்ச்சி!


கல்வி வளர்ச்சியைக் காலந் தின்றது!
பல்கலைக் கழகம் பரிந்து கொடுக்கும்
‘பண்டா ரகர்’ எனும் உயரிய பட்டம்
‘சுண்டல்’ ஆகுக! ‘கடலை’ யாகுக!
(அவைதாம் எனினும் அள்ளிக் கொடுக்க
எவரும் முன்வரார்!) எனவே, அதனை
‘எவருக்’ காகிலும் ஈந்து மகிழ்க!
‘அவரும்’ வாங்கி அடுக்கிக் கொள்க!
இதிலெலாம் நமக்குக் கவலையும் இல்லை!
புதிரிதை விளக்கப் பொழுதும் இல்லை!

அண்ணா மலையார் பல்கலைக் கழகம்
கண்ணா யிருக்கும் கல்வியால் பெருமை
பெற்ற நிலைபோய்ப் பெருங்கல கஞ்செயற்
குற்ற நிலைக்களன் ஆனதும் உண்மையே!

அண்மையில் பட்ட மளிப்பு விழாவினில்
அண்ணா மலையில் நடந்ததை அறிந்தால்
யாகியாக் கானே ‘தோற்றேன்’ என்பான்?
காக்கை குருவியைக் கற்களா லடித்து
விரட்டுதல் போல மாணவர் தம்மை
விரட்டி யுள்ளனர் காவலர் வேங்கைகள்!
முரட்டுத் தனமாய்க் கைகால் முறித்துளர்!
இருட்டு வேளையில் வண்டியில் ஏற்றிப்
பற்பல ஊரிலும் பாதி வழியிலும்
வற்புறுத்தி யவரை இறக்கி வந்துளர்.
பறங்கிப் பேட்டைக் கடலினுள் அமுக்கிக்
கிறங்கச் செய்துளர் மாணவ மணிகளை!

மாணவர் விடுதியுள் காவலர் புகுவதும்
வீணாய் அவரை அடித்து வீழ்ப்பதும்
‘பத்த வச்சலப்’ பாணியென் றறிக!
முத்து வேலர் ‘கருணா நிதி’க்கும்
அந்தப் பாணிதான் ஆட்சிக்கு உரித்தெனில்
இந்தப் படியே இன்னும் நடக்கலாம்;
அவரின் முடிவையே இவரும் அடையலாம்
எவரும் தடுத்திடல் இயலாத வொன்றே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/159&oldid=1446221" இலிருந்து மீள்விக்கப்பட்டது