பக்கம்:கனிச்சாறு 7.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  115


85

வங்க வாகை!


களக் காட்சி:

நுனிவளைந்த கூருகிர்வாய் நெடுங்கழுத்து
நுண்ணோக்குக் கருவிழிகள் செஞ்சிறைகள்
பனிபடர்ந்த கருமுகில்கள் ஊடே பாயும்
பருத்ததலைப் பெரும்பருந்துக் கூட்டம் எல்லாம்
கனிமுதிர்ந்த பேரால மரத்தைச் சுற்றும்
கருங்காக்கைக் கூட்டம் போல் பறந்து சுற்றி
நனிதின்று தசைகிழித்து நரம்பைச் சீய்க்கும்
நரக்காடாம் கீழ்வங்கங் காண்மின்! காண்மின்! 1

1எஃகம்பாய்ந் தெடுத்தெறிந்த தசைதுடிப்ப
எலும்புகளை நரிகடிப்ப நாயிழுப்ப
2அஃகம்போல் செங்குருதி ஊற்றெடுக்க
அடுக்கடுக்காய்ப் பசும்பிணங்கள் சாய்ந்துவீழ
3ஒஃகியசெந் நாவெயிற்றில் இடுக்கிக் கொள்ள
வெஃகாமை மனம்பெருக்கி விடுதலைக்கே
வேட்கைதரும் போர்க்களங்கள் காண்மின்! காண்மின்! 2

கீழ்வங்காளியரின் துணிவைப் புகழ்ந்தது:

வங்காளத் திருநாடே! உணர்வுக் காடே !
வன்னெஞ்சப் பேய்கிழித்த மறவர் மண்ணே!
எங்கோவென் னுடலுக்குள் ஊற்றெடுக்கும்
எம் நிலத்து விடுதலைக்கே உணர்வைச் சாய்க்கும்
மங்காத பெரும் புகழே! வயிரக் குன்றே!
மாநிலத்தின் பெருமூச்சை வரலாறாகச்
செங்காட்டின் குருதியைக்கொண் டெழுதிவைத்த
செந்தமிழின் புறப்பாட்டே வாழ்க! வாழ்க! 3

படைமுகத்துப் பைந்நிறச்சீ ராடை பூணீர்!
பயிற்சியின்றிப் பெருங்களத்தைத் துகைக்க லானீர்!
கடைமுகத்து நெஞ்சினரைக் கிழிக்க லானீர்!
கன்னியரின் உடல் மோந்த நாய்கள் தம்மின்
புடைமுகத்தின் எலும்புகளை நொறுக்க லானீர்!
பூணிகர்த்த தலைவர்க்கொளி யேற்ற லானீர்!
பெடைமுகத்தைப் பெற்றாரைத் துறந்தீர்! யாண்டும்
பெறற்கரிய பெரும்பேற்றைப் பெறல்கொண் டீரே ! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/160&oldid=1446222" இலிருந்து மீள்விக்கப்பட்டது