பக்கம்:கனிச்சாறு 7.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


87

திரு.வி.க. என்னும் மேலோன்!


“உயிர்தமிழுக் குடல்மண்ணுக்” கென்றுரைத்தான்
மணவழகன்; ஓர்ந்து சொன்ன
செயிர்தீர்ந்த பொன்னுரையைக் கடைப்பிடித்தால்
எந்தமிழர் சிறந்தி டாரோ?
வயிரமணி திரு.வி.க. தமிழர்க்குள்!
தமிழ்ப்பாலைக் காய்ச்சித் தோய்த்த
தயிரன்னான்! அத்தயிரைக் கடைந்தெடுத்த
நெய்யாம், அத் தக்கோன் கூற்றே! 1

சப்பற்றுப் போனதுயர் வரலாற்றால்
ஆரியர்பால் அடிமை யுற்றே,
உப்பற்றுக் கூழற்றுக் குடிலற்றுப்
பழம்பெருமை ஒருங்கே யற்றுக்
கொப்பற்ற நெடுமரத்தின் குரங்குகளாய்
எந்தமிழர் குலைந்த போழ்தில்,
எப்பற்றும் பற்றாத தமிழுளத்தால்
அன்னவர்முன் எழுந்து நின்ற, 2

ஒப்பற்ற தமிழ்த்தலைவன்! தமிழ்ப்பற்றென்
றொருபற்றால் மண், பொன், பெண்ணாம்
முப்பற்றும் துறந்தமுனி! முனைப்புற்ற
தமிழ்த்தொண்டன்! வாழ்க்கை முற்றும்
மப்பற்ற வானத்தின் முழுமதிபோல்
பொதுத் தொண்டில் வலமாய் வந்தோன்!
தப்பற்ற பளிங்கனைய தூயவுளம்!
தமிழ்த் தென்றல் திரு.வி.க. வே! 3

சொல்வன்மை, அஞ்சாமை, நடுநிலைமை,
சோர்வின்மை, நேர்மை, தோய்ந்த
பல்வன்மைத் திறலாளன்! சொற்பொழிவால்
பகைவரையும் ஈர்க்கும் வல்லான்!
மல்வன்மைப் பயிற்சியினால் வல்லுடம்பு
வாய்த்திருந்தும் மறம்மே வாதான்!
கல்வன்மை யாயுறுதி கடைப்பிடித்தும்
கல்லாகாக் கனிந்த நெஞ்சன்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/165&oldid=1446230" இலிருந்து மீள்விக்கப்பட்டது