பக்கம்:கனிச்சாறு 7.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121


ஆங்கிலத்தார் புகுந்ததனால், ஆங்கிலத்தால்
பேசிவந்த அந்த நாளில்,
“ஓங்குயர்ந்த செந்தமிழால் உரையுங்கள்,
எழுதுங்கள்; உயர்வாம்” -என்றே
மாங்குயிலாய்க் குரலெடுத்து, மணிமணியாய்த்
தமிழெழுதிக் காட்டி, யார்க்குந்
தீங்கறியாக் கொள்கையினால் தமிழ்ப்பற்றை
ஊட்டிநின்ற திறமை மிக்கோன்! 5

இருபத்து மூவாட்டை இதழ்ப்பணியால்
எந்தமிழை வளர்த்த ஆசான்!
வெருவற்றுத் தொழிலாளர் போராட்டம்
பலநடத்தி, அவர்தம் பாங்கில்
உருவொத்தும் உணர்வொத்தும் ஒன்றாகக்
கிடந்துழன்ற தலைவர் ஓங்கல்!
வரவற்றால் தொண்டிழக்கும் தலைவரிடை
வந்ததையும் தவிர்த்த வள்ளல்! 6

மொழித்தொண்டு, நாட்டுணர்வோ டரசியலில்
சீர்திருத்தம் முகிழ்க்கப் பேசிப்
பழித்தலிலாத் தொண்டுசெய்து, தொழிலாளர்
இயக்கத்தைப் பரக்கத் தோற்றி;
இழித்தொதுக்கும் மூடமதக் கொள்கைகளை
இடந்தோறும் இடித்துக் காட்டி,
விழித்தலிலாப் பெண்ணினத்திற் குயிரூட்டி
வித்தூன்றிப் போன மேலோன்! 7

குப்பத்தும் சேரியினும் கோபுரத்தும்
தொண்டுசெய நுழைந்த காலான்!
முப்பத்தேழ் நூலெழுதி அறிந்தார்க்கும்
அறிவுறுத்த முனைந்த கையான்!
ஒப்பித்தான் மணந்தமனை யிழந்தவிளம்
பருவத்தும் ஒருத்தி கையைத்
தப்பித்தான் பிடியாமல் பொதுத் தொண்டைத்
தலைப்பிடித்த தகையோன் அன்னோன்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/166&oldid=1446231" இலிருந்து மீள்விக்கப்பட்டது