பக்கம்:கனிச்சாறு 7.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 


97

அன்புருவே, எங்கள் அறிவழகா!


அன்புருவே! எங்கள் அறிவழகா! பெற்றோர்க்கே
இன்புருவாய் வந்த இளையோனே! - மன்பதையின்
எண்ணற்ற பேர்களில் யானும் ஒருவனென
மண்ணுற்று மாய்ந்தாயோ, மன்? 1

தேன்பிலிற்றும் சொல்மழலை பேசித் திகழ்ந்துநடை
தான்பயின்று காட்டித் தளதளென - வான்பனையாய்
ஓங்கி வளர்ந்ததுவும் ஒண்கல்வி கற்றதுவும்
நீங்கிடவோ? ஏன் பிறந்தாய் நீ? 2

செந்தமிழைச் செற்றார் செருக்கழிக்க எங்களுடன்
வந்துழைப்பாய் என்றே வயினிருந்தோம்! - “நொந்தழுது
நீருகுத்தே என்னை நினைத்திருங்கள்” என்றோ,நீ
பாருகுத்தாய் நின்னுடல், நீர்ப் பாய்ந்து? 3

பூக்காத மொக்கானாய்! பொய்யில்லாச் சொல்லானாய்!
கோக்காத முத்தானாய்க் கோமகனே! - காக்காத
வெற்றோராய்ப் போனோம்! விளைவின்றிப் போனாய் - நீ!
பெற்றோருக் காறுதலார் பின்? 4

கண்ணின் மணியே! கரவில்லா நல்லுளமே!
மண்ணின் பிறந்ததுவே மற்றல்லால் - பண்ணின்றிச்
செய்துடைந்த யாழாய்ச் சிறப்புணரா நல்லுடலாய்
எய்தியதேன், ஏகியதேன், இன்று? 5

பாடா, நல் தேனீ பறந்ததுவே! காலணிந்த
ஆடாச் சதங்கை அறுந்ததுவே! - ஏடேறா
உள்ளத் திருப்பாடல் ஓய்ந்ததுவே! நீந்தப்போய்
வெள்ளத் தமிழ்ந்ததுவே - வீண்! 6

நற்றாயோ டுந்தை நனியுவக்க நற்கல்வி
கற்றாய்; பணிக்கென்றே கால்நடந்தாய்! - பெற்றாயா?
இல்லை; பெருமகனே! ஏற்றோர் பணிதேடல்
தொல்லையெனப் போயினையோ? சொல்! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/178&oldid=1446252" இலிருந்து மீள்விக்கப்பட்டது