பக்கம்:கனிச்சாறு 7.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  137


100

பாவாணர்! இவர் பாவாணர்!


பாவாணர்! இவர் பாவாணர்!
ஓவா முயற்சி! ஒழியா உழைப்பு!
உண்மைத் தமிழ்க்கே உயிராய் வாழும் (பாவாணர்)

மூவா நந்தமிழ் முழக்கஞ் செய்வார்;
மூடர் தலையின் மடமை கொய்வார்;
ஈவாய் நிற்கும் இன்தமிழ் காத்தே
இளைத்தார்க் கன்பின் மழையாய்ப் பெய்வார்! (பாவாணர்)

காவா நந்தமிழ் காக்கப் பிறந்தார்;
கடமைக் கெனவே வாழ்க்கை துறந்தார்;
நாவால் எழுத்தால் நடையால் அசைவால்
நறுந்தொண் டாற்றித் தமிழ்போல் சிறந்தார்! (பாவாணர்)

எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்தார்;
ஏனைய மொழிகள் இலக்கணம் தோய்ந்தார்;
பழுத்தபே ரறிவால் பைந்தமிழ்த் தாய்க்கே
பசும்பொன் வயிர மகுடமும் வேய்ந்தார்! (பாவாணர்)

மொழியால் இனமும் இனத்தால் நாடும்
முழுமுன் னேற்றம் பெறுதல்கை கூடும்!
விழியாம் நந்தமிழ்! தமிழரெல் லாரும்
விழிப்புற் றெழுக!, என்றிசை பாடும்! (பாவாணர்)

அடிகள் விரும்பிய அருந்தமிழ் அறிஞர்!
அன்னைத் தமிழின் மேன்மையில் குறிஞர்!
விடியாத் தமிழரின் விடிவினை விரும்பி
விடியலும் உழைக்கும் வாழ்வியல் வறிஞர்! (பாவாணர்)

செந்தமிழ்ச் சொற்பிறப் பியல்தெரி புலவர்;
செந்தமிழ்ச் சொற்களின் வேர்அகழ் வலவர்!
எந்தமிழ்த் தாயினுக் கெழில்நலஞ் சேர்க்கும்
எம்முடைக் குரிசில்! இனநல மறவர் (பாவாணர்)

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/182&oldid=1446972" இலிருந்து மீள்விக்கப்பட்டது