பக்கம்:கனிச்சாறு 7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


104

புத்தனைப் போற்று!


புத்தனைப் போற்று - குழந்தாய்
புத்தனைப் போற்று!

எத்தனை தான் துன்பம் வரினும்
இன்பம் மலரும் அருள்முகத்தின் (புத்தனைப்)

சித்தனவன்; செறிவனவன்;
சீர்மை மிகுந்த அறிவனவன்;
இத்தரையின் துன்பம் நீங்க
இன்பம் அனைத்தும் துறந்தனவன்! (புத்தனைப்)

ஒழுங்கு, நேர்மை, உண்மை, அன்பு
உலக உயிர்கள் துன்பம் கண்டால்
அழுங்கும் உள்ளம் அவனின் உள்ளம்;
அனைத்துயிர்க்கும் அருளின் வெள்ளம்! (புத்தனைப்)

-1979




105

தெருள்மிகு தெசிணி வாழ்க!



பாட்டினில், பதினெட் டாண்டாய்ப்
பைந்தமிழ்க் ‘கவிதை’ என்னும்
ஏட்டினை நடத்து கின்றார்
‘தெசிணி’என் றால்அ வர்க்கு
மேட்டிமை பலவும் உண்டு;
மேலான புலமை உண்டு
நாட்டினுள் தமிழ்த்தொண் டாற்றும்
நல்லாருள் நல்ல தொண்டர்!

பாடிய வெல்லாம் பாட்டென்
றியம்பிடும் பாழோர் பாங்கில்
நீடிய மரபும் யாப்பும்
நீங்காமல் பாக்கள் யாத்து
வாடிய தமிழ்ப்ப யிர்க்கே
வளஞ்சேர்க்கும் ‘கவிதை’ இன்னும்
கூடிய பெருமை யோடு
குவலயம் செழிக்க வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/185&oldid=1446978" இலிருந்து மீள்விக்கப்பட்டது