பக்கம்:கனிச்சாறு 7.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  141

பொருள் தொண்டு செய்வார் சில்லோர்
புகழ்த் தொண்டு சில்லோர் செய்வார்;
அருள் தொண்டு செய்வோம் என்னும்
அடியார்கள் பலரிங் குள்ளார்!
இருள்மிகு தமிழ்நாட் டார்க்கே
ஏற்றநல் தமிழ்த்தொண் டாற்றும்
தெருள்மிகு ‘தெசிணி’ என்னும்
தீந்தமிழ்ப் புலவர் வாழ்க!

1979




106

தமிழோடு வாழ்கின்றான்!



பாப்புலவன் பாரதிக்கு மேலாகப்
பாட்டெழுதி பாரதியென்
றோர்புலமைப் பட்டம் பெற்ற
நாப்புலவன் சோமசுந்(த)ர நாவலன்காண்!
நற்றமிழை நரிப்புலவர் நடுத்தெருவில்
நலிவேற் றுங்கால்,
மீப்புலமைத் தன்மையினால் மிதித்தெழுந்து
முழங்கியமா மறநெஞ்சன்!
மேன்மைமிகு தமிழ்செய் தொண்டன்!
சாப்புலவன் அல்லனிவன்; சாகாத
தமிழ்காத்த தால்தானும்
சாகாத புகழைப் பெற்றான்!

புன்மைமிகு இந்தியெனும் புரைமொழிசெந்
தமிழ்ப்புலத்தில் பொலபொலெனப்
புலையர்வழிப் புகுந்த காலை,
வன்மைமிகு அரிமாப்போல் சீர்த்தெழுந்து
வண்டமிழில் முழங்கி, யதன்
வாலறுத்த வாலை நெஞ்சன்!
சொன்மைமிகு செம்புலமைத் திறம்படைத்த
சொல்லாளன்; பொருளாளன்;
சூர்த்தடங்கண் பெருநோக் காளன்!
தொன்மைமிகு இலக்கணநூல் தொல்காப்பி
யம்புகுந்தே உரைகண்ட
தோய்புலமைச் சீர்மை யோனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/186&oldid=1446979" இலிருந்து மீள்விக்கப்பட்டது