பக்கம்:கனிச்சாறு 7.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  143


107

பெரியார் உவக்கும் பெருந்தொண்டர்
நெடுஞ்செழியனார் பல்லாண்டு வாழ்க!


பெரியார் உவக்கும் பெருந் தொண்டர்
என்னும் பெருமை பெற்று,
நரியார் நடுங்கும் நடுங்கா
நளிர்தமிழ் நாவலராய்
உரியார் மகிழும் உரமுடை
யோராய் உலவிவரும்
அரியார் அமைச்சர் நெடுஞ்செழி
யப்பேர் அருமையரே!

அண்ணா அமைத்த அமைச்ச
ரவையில் அமர்ந்தவர்க்குக்
கண்ணா யிருந்திரு கைகள்
கொடுத்துக் கடமை செய்தே
ஒண்ணார் அழுங்க, தமிழர்
உவக்க உயர் நலன்கள்
தண்ணார் தமிழ்க்கும் தமிழ்நா
டதற்கும் தகைந்தவரே!

தொகுத்துரை யாற்றும் உரைத்திறன்,
துன்பங்கள் சூழ்ந்துவிட்டால்
வகுத்தினி தாற்றுமோர் வல்லமை,
நல்லன வல்லவற்றைச்
செகுத்தயல் வீழ்த்தும் செழித்தசெம்
மாப்பு நெடுஞ்செழியப்
பகுத்தறி வாளராம் பல்லாண்டு
வாழ்க பயனுறவே!

(வெண்பா)


நெடிய உருவம், நெகிழாநேர் நோக்கு,
படிய உடுத்தவுடைப் பாங்கு - மடியாத
ஆள்திறமை நாவன்மை ஆர்த்த நெடுஞ்செழியன்
தோள்தழுவும் நந்தமிழர் தொண்டு.

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/188&oldid=1446982" இலிருந்து மீள்விக்கப்பட்டது