பக்கம்:கனிச்சாறு 7.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


108

பாவாணர் இரங்கல் பதிகம்!


கண்ணீர் வற்றிக் கடல்வற்றி - நீள்
கடலின் அருகில் ஊற்றெடுக்கும்
உண்ணீர் வற்றி உலகளிக்க - மேல்
உலாவும் மேகத் திரள் வற்றித்
தண்ணீர் வற்றித் தரை முழுதும் - செந்
தணலே பற்றித் தீய்த்ததுவே,
ஒண்ணீர் அறிவுப் பாவாண - நான்
உனையே பிரிந்த போழ்தினிலே!

கண்கள் இருண்டு காதழன்று - இரு
காலும் சோர்ந்து கையற்று,
மண்கொள் மலைகள் இடிந்துருண்டு - என்
மண்டை யழுத்த வளிதிக்கித்
திண்கொள் நெஞ்சம் அறக்கிழிந்தே - எண்
திசையும் அரத்தம் பாய்ந்த துவே,
பண்கொள் நாவின் பாவாண - நீ
படுக்கை சாய்ந்த போழ்தினிலே!

தசையும் காய்ந்து கரியாகி - மெய்த்
தண்டும் நரம்பும் பொடியாகிப்
பசையும் உருகி நெய்யாகிச் - செம்
பாலும் சுவர்ந்து வளியாகிப்
பிசையும் நெஞ்சக் குலை வெடித்துச், சாப்
பேய்க்குக் களமாய்ப் போயினவே,
வகையில் இசைசேர் பாவாண - நீ
வானம் புகுந்த போழ்தினிலே!

நிலமும் வெந்து நீராகி - மண்
நீரும் கொதித்து வளியாகிப்
பொலமொண் தீயும் புகையாகி - வான்
போழும் வளியும் வெளியாகிப்
புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம்
பூதத் தூழி ஆர்த்ததுவே,
அலமார் நெஞ்சில் பாவாண - நீ
ஆக்கை கழன்ற போழ்தினிலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/189&oldid=1446983" இலிருந்து மீள்விக்கப்பட்டது