பக்கம்:கனிச்சாறு 7.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  145



தமிழே தொகைந்து கருவாகித் - தீந்
தமிழே புகுந்துள் ளுயிர்ப்பாகித்
தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த்
தமிழே உருவாய் உலாவந்து,
தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின்
தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம்,
தமிழாய் வாழ்ந்த பாவாண - நீ
தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே!

ஒளிசேர் விழியும் சுடர்நுதலும் - நல்
லுரஞ்சேர் நெஞ்சும் தமிழ்நினைவும்,
வளிவார் முடியும் நரைதலையும் - உயர்
வல்லென் மூளைக் கொழுதிரளும்,
அளிசேர் தமிழ்தோய் ஆருயிரும் - ஓர்
அணுவாய் அணுவாய் உட்கரைந்தே
வெளிசேர்ந் தனவோ பாவாண - நீ
விண்ணில் ஏறிய போழ்தினிலே!

சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர்
சோரா துயர்த்துந் தெள்ளறிவும்
காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க்
கதையாய்ச் சொன்னாய்; கதை நிறுத்திப்
பாலை நடுவில் எனை விடுத்தாய்! - உள்
பதைப்புற் றுயிருஞ் சிதைந்ததுவே,
வாலை அறிவுப் பாவாண - நீ
வாழ்க்கை துறந்த போழ்தினிலே!

பொன்னார் மாடத் திருக்கோயில் - நின்
புலனால் சமைத்துத் தமிழணங்கை
மின்னோர் இறைமைத் திருவுருவாய் - ஒளி
மிளிரச் செய்தே வழிபட்டாய்!
உன்னோர் அழுங்க ஊரழுங்க - என்
உயிரும் உடலும் ஒருங்கழுத,
என்னேர் ஆவிப் பாவண, நீ
எனையே தவிர்ந்த போழ்தினிலே!

உலவல் மறந்தாய் ஊண்மறந்தாய் - உன்
உறவே வாழ்வென் றுவந்ததுணைக்
குலவல் மறந்தாய் குளிமறந்தாய் - புதுக்
கூறை வாங்கும் நிலைமறந்தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/190&oldid=1446984" இலிருந்து மீள்விக்கப்பட்டது