பக்கம்:கனிச்சாறு 7.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


111

என் மனைவி தாமரையாள்!


எடுப்பு


இனிது அவளது நினைவு - எனக்
கெத்துணை நீண்ட தொலைவில் இருப்பினும் (இனிது)

முடிப்பு!


கனிவு சான்ற அன்பு விழியினள்!
கதைகள் பேசும் பிள்ளை மொழியினள்!
முனிவு நீக்கும் தொண்டு வினையினள்!
முதிர்ந்த உணர்வின் இணைந்த துணையினள்! (இனிது)

காலை விழித்த பொழுது தொடங்கி
கணமும் ஓய்வில் லாமல் இயங்கி
வேலை குவிந்த வாழ்வு சுமந்தாள்;
விரிந்த உணர்வில் உயிரில் கலந்தாள்! (இனிது)

ஆறு நல் உயிர்களைத் தோற்றிய தாயவள்!
ஆயினும் என்னுடன் ஒன்றிய சேயவள்!
கூறுசொல் ஒவ்வொன்றும் அன்பினில் தோய்த்தவள்!
கொள்கை செய் வாழ்க்கையில் எனக்கென வாய்த்தவள் (இனிது)

ஏற்காத கொள்கைக்கு வம்படி செய்வாள்!
இணையாத சூழலுக் கென்னொடும் நைவாள்!
தோற்காத உறுதிசெய் பேச்சவள் பேச்சு!
தோல்விக்கும் குலையாத வீச்சவள் வீச்சு! (இனிது)

எளிமையின் தோற்றத்தாள்! வலிமையின் போர்வாள்!
ஏழ்மையில் மனங்கோணா தென்னொடுந் தேர்வாள்!
களிமயில் போலாவாள் மகிழ்வாகும் நாளை!
கல்போலும் அமர்வாளோர் துயர்தோயும் வேளை! (இனிது)

விருந்துக்குச் சளைக்காத கைவினைக் காரி!
வெந்துயர்க் கிருவிழி பொழிதரும் மாரி!
வருந்துவார்க் கழுங்கியுளம் இரங்குகின்ற அன்னை!
வாழ்விக்க வந்தவளாம் கொள்கையோ டென்னை! (இனிது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/193&oldid=1446990" இலிருந்து மீள்விக்கப்பட்டது