பக்கம்:கனிச்சாறு 7.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


112

திரு.வி.க. எனுந் தெய்வம்!


மணவழ கர்க்கு நூற்றாண் டு,விழா!
மணக்க மணக்க நடந்தது நாட்டில்!
உணவும் உடையுமே வாழ்க்கையென் றுலவும்
உலுத்தர்க் கிடையிலும் ஊசையர்க் கிடையிலும்
பணமே நோக்கம், பகட்டே ஆக்கமெனும்
பன்னாடை மக்கட் கிடையிலும் வாழ்ந்த
குணமே வியஒரு கொள்கையின் குன்றம்;
குற்றமில் லாதஓர் வாழ்க்கையின் கூறு, அவர்!

“பொய்யைச் சொல்லித்தான் வாழ்க்கை பண்ணலாம்,
புரட்டைச் செய்துதான் புகழைத் தேடலாம்;
மெய்யைச் சொன்னால் மெச்சுவ தார்”- எனும்
மேனா மினுக்கிகள் வாழ்ந்திடும் நாட்டினில்,
கையைக் கறைசெயா துடல்நலம் கருதாது
காலம் முழுதுமே கடமைகள் ஆற்றிட
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தநல் தெய்வம்!
வாழ்த்தினால் நாமும் வாழ்கின்ற மொய்ம்பு!

தூய்தமிழ் வழக்கைத் தோற்றிய பெருமை
துறவி மறைமலைக் குண்டெனில், இவர்க்கு
வாய்தமிழ் உரையை மேடைமேல் ஏற்றி
வையம் முழங்கிய பெருமைமிக் குண்டாம்!
ஓய்வும் ஒழிவும் இலாமல் 'என்றனின்
உடலம் மண்ணுக்கு; உயிர்தமி ழுக்'கென
ஏய்வுறு கூற்றை எழுதிச் செய்தவர்!
என்றென்றும் வாழும் எந்தமிழ் போன்றவர்!

‘பணியுமாம் பெருமை’ எனும்பைந் தமிழ்க்குப்
பயில்வுரை எழுதிப் பதிப்புரை தந்தவர்!
தணியாத் தமிழ்விடாய், தளர்வுறாக் கால்கள்,
தாழ்விலாச் செய்கை, தகைவுசேர் பயனுரை,
அணியம் தமிழ்க்கெனும் அருமை நூல்கள்
அயர்வுறா தேழையர்க் கலைந்து திரிந்து
மணியும் நேரமும் காலமும் பாராது
மக்கட் குழைத்த மணவழக னாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/195&oldid=1446993" இலிருந்து மீள்விக்கப்பட்டது