பக்கம்:கனிச்சாறு 7.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  153


115

அன்பின் விளைநிலங்கள்!


தென்மொழி முத்துக் குமரனின் திருவுளம்
என்மொழி, இன, நிலத் தொண்டுக்கு எருவாம்!
பல்லடம் பயந்த பண்புள்ள உருவம்!
சல்லடை போட்டுச் சலித்தெடுத் தாலும்
கரவும் கயமையும் கள்ளமும் நிறைந்த
உருவம் பற்பல உலாவரும் காலத்தில்
எங்கணும் காணா இறைமைத் திருவுளம்!
பொங்கும்அன் பருவி! புரையிலாப் பொய்கை!
அன்பின் விளைநிலம்! ஆருயிர் மருந்து!
என்பெலாம் நெகிழ்க்கும் இன்ப உணர்வுளம்! 10
குளிர்மதி நல்முகம்! குறையிலா உரைவாய்!
வெளிர்ஒளி உள்ளம்! விரிநிறை அறிமதி!

அத்தகு உளத்தோ டமைந்துளம் பொருந்திய
மெத்த அன்புரை மேன்மை உளங்கள்
இரண்டுள! அவற்றுள் இனியநல் ஒன்று,
திரண்டுள அன்பெலாந் திருமுகத் தொளிரும்
பல்லடம் ஆறு முகத்தின் திருவுளம்!

வல்லமற் றொன்று, வாழ்வுறுந் தென்மொழி
துரையர சாளும் தூய்மைப் பேருளம்
உரையிலும் செயலிலும் உண்மைமற் றில்லா 20
வேற்றி யாத வியத்தகு உள்ளம்!
ஏறுமா றில்லா இன்சொல் வழங்கி
அன்றும் இன்றும் அகலா வுணர்வொடு
என்றும் ஒன்றுபோல் இருக்கும் தமிழுளம்!
வடியா அன்பொடு மாந்தன் இருக்க
முடியுமென் பதற்கு முழுச்சான் றவருளம்!

ஆறு முகமெனும் அணையா விளக்கம்!
ஏறுமென் உணர்வுக்கு ஏற்ற தூண்டுகோல்!
செல்வர் ஒருவர் சிதையா நெஞ்சொடும்
பல்வா றுணர்ந்த பட்டறி வோடும் 30
தண்டமிழ்ப் பணிக்கும் தமிழினத் தொண்டுக்கும்
‘உண்டுநான் துணை’, எனும் ஒருமை உணர்வொடும்
நின்று நிலைபெறு கின்றார் எனில், அது
தொன்றுதொட் டுயர்ந்த தூய்மர மன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/198&oldid=1446997" இலிருந்து மீள்விக்கப்பட்டது