பக்கம்:கனிச்சாறு 7.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௬


கனிச்சாறு ஏழாம் தொகுதி
(தன்னிலைப் பாடல்கள், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து,
திருமண வாழ்த்து, மதிப்புரைகள்)
பாடல் விளக்கக் குறிப்புகள்


–பொது ‘அ’ தன்னிலைப் பாடல்கள்–


1. 1949-இல் பாவலரேறு தம் கல்லூரிப் படிப்புத் தொடக்கத்தில், அவர்தம் பதினான்காவது அகவையிலேயே எழுதியிருந்த ‘மல்லிகை’ ‘கொய்யாக்கனி’ என்ற இரண்டு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு, சேலத்திலிருந்து புதுச்சேரிக்குப் பாவேந்தர் பாரதிதாசனை முதல்முறையாகப் பார்க்கச் சென்றபொழுது பாவேந்தர் ‘மல்லிகை’யின் முதல் பாடலாகிய,

‘வான்சிரித்து வண்ணவொளி வீசிற்றங்கே;
வயல்நோக்கிப் போந்தனர்தென் உழவரெல்லாம்;
கான்யாற்றின் கரையினில் நல்வஞ்சியர்கள்
கமழ்கின்ற சந்தனத்தை யள்ளித் தம்மென்
மேனிகளில் பூசுகின்றார், பரிதி அந்த
மெல்லனைய ஒண்டொடியர் மீதில்செம்பொன்
போன்றொளியைப் பூசுகின்றான்! தமிழ்ப்பெண்டிர்
புரள்கின்ற நீள்குழலால் வணக்கம் செய்வர்!’

என்னும் பாடலைப் படித்துவிட்டுக், “கான்யாறு என்றால் காட்டாறு. அங்குக் குளிப்பவர்களுக்குச் சந்தனம் எங்கிருந்து வந்தது? சேறுதான் கிடைக்கும், அள்ளிப் பூசிக்கொள்ள!” என்று குறைகூறிப் பாவியத்தை மேலும் பார்க்க மறுத்துத் திருப்பிக் கொடுத்துப் ‘பாட்டு எல்லாருக்கும் எழுத வராது; ஒரு சிலர்க்கே வரும். பாட்டுப் படிக்க வேண்டியவனெல்லாம் பாட்டு எழுதக்கூடாது. நீ போய் இன்னும் படி’ என்று கூறிப் போகச் சொன்னார். பின் எத்தனைமுறை வேண்டியும், அவர் நூல்களைப் பார்க்க மறுத்து விட்டதால், ஐயா அவர்கள் புதுவையின் கடற்கரைக்குச் சென்று அமர்ந்து மிகவும் வருத்தத்துடன் எழுதிய பாடலிது.

அதன் பின்னர் நான்காண்டுகள் கழித்து 1954-இல் பாவலரேறு மீண்டும் அதே புதுவைக்கு அரசுப் பணியின் பொருட்டு வந்தபொழுது, பாவேந்தரிடம் சென்று அக்கால் சேலங் கல்லூரிப் பேராசிரியராக விருந்த தம் ஆசிரியர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிக் கொடுத்தனுப்பிய கீழ்வரும் பாராட்டுப் பாடலைக் காட்டினார்.

“துரைமாணிக்கம் இன்பத்தூடு
துள்ளும்இன்ப அருவிபோன்றே
வரைமாணிக்கம் ஆகிப் பல்ல
வகையால் உணர்ச்சிப் பாக்களாக
உரைமாணிக்கக் கொத்தின் கற்கள்
உள்ளத் தழகாய்ப் பட்டை தீர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/20&oldid=1445482" இலிருந்து மீள்விக்கப்பட்டது