பக்கம்:கனிச்சாறு 7.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  155

ஒற்றைஓர் இம்மியும் ஒதுங்கிடா தென்னைப் 10
பற்றிப் படருமிப் பச்சைக் கொடிகளில்
உற்றவை அன்பெனும் உயர்மணப் பூக்களே!

கள்ளமும் கவடும் கயமையும் நிறைந்தே
உள்ளம் ஒளித்தே உலாவரும் உலகில்,
வெள்ளப் பெருக்கென அன்பினால் விரிந்து,
கொள்ளை கொள்ளையாய்த் தமிழ்ப்பயிர் கொழிக்க,
ஒவ்வோ ராண்டும் ஓடோடி வந்தே
எவ்வொரு தயக்கமும் இன்றி, இருகையால்,
எனக்குப் பிறந்தநாள் எனநினை வூட்டி,
மனக்கனி வோடும், மகிழ்முகத் தோடும், 20
கண்களும் வாய்களும் கன்னக் கனிகளும்
ஒண்சுடர் ஒளிக்கதிர் உமிழ, அன் பொழுக
கைகள் வழிந்திட ஈயும் கனிவினை,
மெய்யோ டுயிர்கலந் திருக்கும் வரையிலும்,
உயிரணுத் திரள்கள் உள்ளொளி காழ்ந்தே
உயிர்ப்பே ரொளியோ டொன்றும் வரையிலும்,
மறப்பேன் கொல்லோ! மாண்பினார் அன்பைத்
துறப்பேன் கொல்லோ!
                                     தொன்தமிழ் வளர்க்கையில்
பொய்யரும் புளுகரும் புன்மைக் கயவரும்
வெய்ய பழியும் இழிவும் வீசலால் 30
புண்ணாகி நெஞ்சம் புலம்பிடும் பொழுதில்
கண்ணாகி என்றனைக் காத்திடும் அவர்திறம்
அன்னை அன்பினும் அத்தன் காப்பினும்
பன்னூறு மடங்காய்ப் பயிலுவ தன்றோ?

பொன்னும் முத்துமாய் ஒன்றிப் பொலிந்திடும்
இன்னரும் நட்பின் இருவரும், எந்தமிழ்
ஒளிர்வது போலும் ஒளிர்ந்து,
மிளிர்வதும் மெய்யே, மேன்மேலும் உயர்ந்தே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/200&oldid=1447000" இலிருந்து மீள்விக்கப்பட்டது