பக்கம்:கனிச்சாறு 7.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


117

அரிமா வளங்கோ!


தனரா சென்னும் தன்பெயர் தவிர்த்தே
இன மொழி, நாட்டை யாவினும் உயர்த்த
அரிமா வளங்கோ என, அரும் பெயரை
உரிமை ஆக்கிய உரவோன்! ‘தென்மொழி’
தொடங்கிய பொழுதில் தோள்தந் தியங்கி
முடங்கிய பொழுதில் முழுத்துணை நின்று,
நாளுங் கிழமையும் நடுநடு வந்து,
வாளெனக் காத்து வருபொருள் உரைத்துப்
புதுவை வாழ்ந்த பொழுதெலாம் உழைத்தோன்!
எதுநான் எண்ணுவேன் அதுசெய லாக்கி, 10
ஆர்வ இளைஞர் அரிமா மகிழ்கோ
நேர்வுற வைத்து நிழல்போல் இருந்து,
‘சிப்மர்’ மலரினைச் சீருற வாக்கிய
மற்போர் மல்லன்! மதிநிறை குணத்தன்!

அருளியை ஆற்றுப் படுத்திய அறிஞன்!
மருளிலாக் கொள்கையன்! மாறிலா வினைஞன்!
குளிர்முகங் கோணாக் குன்றா அன்பினன்!
ஒளியுமிழ் கண்ணும் உரைதவழ் வாயும்
தீதிலா நெஞ்சும் தீந்தமிழ் உணர்வும்
கோதிலா நடையும் கொள்கைச் செருக்கும் 20
வாய்ந்த உயிரினன்!
                                       வாழ்விடம் மாற்றி
ஆய்ந்த தமிழுக் காக்கம் தந்த
பிரஞ்சுப் பெருநா டேகிப் பிரிந்தும்
நறுஞ்சுவைத் தமிழின் நசைமா றாமல்
அன்புத் தமிழர்க்கு ஆர்வம் கொளுத்தி
என்புந் தசையும் இயக்கமுந் தமிழென
உலாவரும் உரவோன்! உலகத் தமிழினம்
அளாவும் முன்னேற்றக் கழகம் அமைத்தே
எனைமற வாமல் எண்ணருஞ் செல்வம்
தனையிறைத் தென்னைத் தாவி வருகென 30
அழைத்து விழாவெடுத் தமிழா நறும்புகழ்
உழைத்துப் பெற்ற உண்மைத் தொண்டன்!

இன்னருந் துணையோ டேழு குழந்தைகள்
நன்னர் பொருந்திய குடும்ப நயப்பினன்!
அவ்வப் பொழுது தென்மொழிக் கருங்கொடை
ஒவ்வக் கொடுத்த உளங்கொள் பெருந்தகை!
கொப்பொடுங் கிளையெ கொழிக்க
எப்பொழு தும்குடி ஏற்றமுற் றுயர்கவே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/201&oldid=1447003" இலிருந்து மீள்விக்கப்பட்டது