பக்கம்:கனிச்சாறு 7.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  157


118

முனைமழுங்கா வீரன் தமிழரசன்!


செவ்வணக்கக் கைதூக்கிச்
செங்கொடியை ஏந்திச்
சிரித்தமுக நெற்றியிலே
சிந்தனையைத் தேக்கி
முவ்வுரமும் எழுச்சியுற
முடுகிநடை யிட்ட
முனைமழுங்கா வீரனவன்,
தமிழரசன்! முன்னைக்
கவ்வியுள்ள இருள்போக்கக்
காளையரைக் கூட்டிக்
கடும்பகையை எதிர்த்திடவும்
கண்விழித்து நின்றான்!
வெவ்வதிகா ரக்கொடுமைச்
சூழ்ச்சியினால் வீழ்ந்தான்!
விடுதலைசேர் தமிழகத்தில்
வீழ்ச்சியின்றி வாழ்வான்!

பெற்றவரை மறந்தபெறும்
வீரனவன்! பெற்ற
பெருநிலத்தைத் தாய்மொழியைப்
பேணுகின்ற நோக்கில்
உற்றதுணை யாளர்களை
உருவாக்கிச் சேர்த்தே
ஒருபுரட்சி செய்திடவே
ஊரூராய்ச் சென்றே
கற்றகொள்கை பரப்பியவன்!
கனன்றெழுந்த போதில்
காளையவன் களத்தினிலே
கன்னிஉயிர் தந்தான்!
ஒற்றர்களால் உலுத்தர்களால்
உயிர்பறிக்கப் பட்டான்!
உரிமைபெறுந் தமிழ்நாட்டில்
உயிர்வாழ்ந்து நிற்பான்!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/202&oldid=1447005" இலிருந்து மீள்விக்கப்பட்டது