பக்கம்:கனிச்சாறு 7.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  161

செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
வெந்தணல் ஒன்று விரைந்ததென - முந்தியே
பின் விளைவாக் கூறினை, பெரும்புரட்சிப் பாவேந்தே!
இன்விளைவாக் கண்டோமே இன்று!

தந்தை பெரியார் தணல் கருத்தைப் பாவடிவில்
முந்தை நறுந்தமிழில் மூட்டுவித்தாய்! - சிந்தை
கனல்பற்றும்! செந்தமிழர் காட்டுத் தீயாய்க்கனல்!
அனல்பற்றும் பார், பகைமேல் ஆர்ந்து!

திருவள்ளு வர்க்குப்பின் தீந்தமிழின் மக்கள்
ஒருவல் லினமாய் உணர்ந்து - பெருவலிவு
கொள்ளுதற்குப் பாவேந்தே நீகொண்ட கொள்கையிலே
எள்ளுதற்கிங் கேதோர் இடம்?

-1990



122

அம்பேத்கர் வாழ்க!



தாம்பட்ட இழிவும் துன்பும்
தம்மக்கள் படக்கூ டாதென்
றோம்பிய ஒழுக்கம், கல்வி,
உயர்பணி, பதவி பெற்று
மேம்பட்ட அறிவுத் தொண்டால்
மிகப்பயன் தந்தே, மக்கள்
தேம்புற மறையா நின்றார்,
திகழ்அம்பேத் கராம்நல் மேதை!

உலகப்பே ரறிஞர்க் குள்ளே
உலவிய பெரும்பே ராற்றல்!
நிலவிய இழிவு, தாழ்ச்சி
நீங்கிட உழைத்தே, இந்த
நிலவுல குள்ள காலம்
நிலைத்திடும் புகழைப் பெற்றார்!
வலவராம் அவர்நூற் றாண்டில்
வாழ்த்துவோம் நன்றி கூறி!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/206&oldid=1447016" இலிருந்து மீள்விக்கப்பட்டது