பக்கம்:கனிச்சாறு 7.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


123  புலவர் அரசு வாழியவே!


உலகம்மை - மாரிமுத்தர்
உவந்துபெற்ற ‘அரசு’ என்னும்
இலகு இராம சாமியவர்
எழில் உளத்திற் கிணைசொன்னால்
விலகுதமிழ்ப் பகைக்கெழுந்த
வீரத்தைச் சொலல்வேண்டும்!
பலகல்வித் தொண்டுசெய்து
பழுத்தவுளம் அவருளமே!

ஒப்பரிய பேரன்போ(டு)
ஒழுக்கமும்நல் நடைமுறையும்
செப்பரிய பண்புணர்வும்
மாணவர்பால் சேர்ந்திலங்க
முப்பொழுதும் உளம்நினைந்து
முழுவதுமாய்த் தமையீந்தே
அப்பழுக்கி லாதுழைக்கும்
ஆசிரியப் பெருமகனே!

குறைவில்லா நல்லுணர்வால்
கோபிப்பா ளையம் அரசு
நிறைவான பொதுப்பணிகள்
நித்தமுமே செய்துயர்ந்தே
‘இறைவனவன் கற்பித்தோன்’
எனும்மொழிக்கே இலக்கியமாய்
உறைவூரார் புகழ்ந்தேத்த
ஊருணியாய் விளங்குவரே!

எளிமையிலே புறந்தோன்றி
ஏழ்மையிலே வளர்ந்தோங்கி
வெளிமயக்கில் உளந்திறம்பா
வீறுணவர்வால் கற்றுயர்ந்து
களிமயிலாய் மாணவர்க்குக்
கற்பிக்கும் கடமையொடு
தெளிவுறவே பாடாற்றித்
திருக்குறளாய் வாழ்பவரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/207&oldid=1447019" இலிருந்து மீள்விக்கப்பட்டது