பக்கம்:கனிச்சாறு 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ0

கனிச்சாறு ஏழாம் தொகுதி

திரைமாணிக்கம் என்னத்தேறித்
தென்னாடெங்கும் திகழ்க மன்னோ”

–இப்பாடலையும் பாவலரேறு எடுத்துச் சென்ற பாடல்களையும் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற பாவேந்தர், தம் மகன் மன்னர்மன்னனை அழைத்து அவரிடம், ‘தம்பி, இந்தாப்பா, இவரை எங்கெங்கேயோ தேடினோமே! இங்க வந்து நிற்கிறாரு. இவரை என்றைக்கும் கைவிட்டு விடாதே. கடைசிவரை உன்னோடேயே வைத்துக்கொள்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அக்கால் பாவலரேறு, பாவேந்தரிடம் தாம் நான்காண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பாவியங்களுடன் வந்திருந்த செய்தியை நினைவூட்டிக்கூறி, அக்கால் மனம் வருந்தித் தாம் எழுதிய இப் பாடலையும் பாடிக் காட்டினார். பாவேந்தர் இப் பாடலைக் கேட்டு மிகவும் வருந்தியவராயும், இப்பாடலால் மகிழ்ந்தவராயும், ‘அப்பொழுது வேறு மாதிரி நிலையில் இருந்திருப்பேன்; அந்நிகழ்ச்சியை மறந்துவிடு’ என்று அன்பொழுக ஐயாவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் முன்னாள் பார்க்கத் தவறிய பாவலரேறுவின் இரு பாவியங்களில் ‘கொய்யாக்கனி’ எனும் பாவியத்தை முழுவதும் படித்துப்பார்த்து, அதனைத் தம் மகனாரிடம் கூறி அச்சிடவைத்து, அவர் தாமே விரும்பி அதற்கொரு மதிப்புரையையும் பாடலாக எழுதிக் கொடுத்தார். ஐயா வேண்டிக் கொள்ளாமலேயே பாவேந்தர் தாமே மகிழ்ந்து எழுதிக் கொடுத்த ‘கொய்யாக்கனி’ மதிப்புரைப் பாடல் இது:

கள்ளம் எப்படி; அப்படிக்
கடுகளவும் இலாத நெஞ்சினார்; முக்
கனிகள் எப்படி அப்படிப்
போன்றமுத் தமிழின்மேல் அன்பர்;
குள்ளம் எப்படி அப்படி
யிலாப் பெருங்கொள்கையுடையார்;
குரைகடல் எப்படி அப்படிக்
குண நிறை துரைமாணிக்கனார்
வெள்ளம் எப்படி அப்படிப்
செந்தமிழ்ச் சொற்பெருக்கேற
மேன்மை எப்படி அப்படிப்
போன்ற நடையில்தம் நல்ல
உள்ளம் எப்படி அப்படித்
தந்ததோர் உயர்தமிழ் நூல்தான்
உலகம் எப்படி அப்படிப்
பட்டதோர் நிலைகொள் கொய்யாக்கனியே!

அதன்பின் பாவேந்தருடன், புதுச்சேரியினின்று கடலூருக்கு மாறுதலாகிய 1959ஆம் ஆண்டுவரை மிகவும் நெருங்கிப் பழகியிருந்தார் பாவலரேறு. அக்கால் நடந்த பாவேந்தரின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், பல.

எனவே பாவேந்தருடன் தொடர்பு ஏற்படுவதற்குக் கரணியமாகவிருந்த சிறப்புப் பெறும் பாடல் இதுவாகும். கவி, கவிதை, கவிஞன் என்ற மூன்று வடசொற்கள் இதில் களையப்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/21&oldid=1445487" இலிருந்து மீள்விக்கப்பட்டது