பக்கம்:கனிச்சாறு 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

அணியேற்றம் இல்லை, உன்
அன்னைக்கும் உங்கட்கும்!
அன்றைக் கன்றைத்
தணிவுற்றுப் பெற்றதொகை
தனைக்கொண்டு வாழ்ந்தோம்,உன்
தாயும் நானும்!

மணம்சேர்த்து வைத்த எங்கள்
மகிழ்ச்சியிலே பெற்றெடுத்த
மக்கட் கெல்லாம்
பணம்சேர்த்து வைக்காமல்,
பயன்கல்வி தனைச்சேர்த்தோம்;
பண்பு சேர்த்தோம்!
குணம்சேர்த்தோம்; நீங்களெல்லாம்
கூனாமல் வாழ்வதற்குக்
கொள்கை சேர்த்தோம்;
கடமைசேர்த்த பார்வைகண்டு
காதல்மணம் ஒப்பி, உங்கள்
கைகள் சேர்த்தோம்!

தமிழுக்கும் தமிழர்க்கும்
தமிழ்நாட்டு விடுதலைக்கும்
தளராது உள்ளம்
அமிழ்க்காமல் அசையாமல்
ஆர்ப்பரிப்புக் கொள்ளாமல்
ஆய்ந்த கொள்கை
உமிழ்க்காமல் அரசியலில்
உரசாமல் அங்கும் இங்கும்
ஊசலா டாமல்,
சிமிழ்க்கின்ற பார்வையிலே
சீரழிக்கும் பகைநடுங்கச்
செயல்கொண் டேனே!

மகளே! உன் மனத்தூய்மை
மதித்திறம், வாய் மை, ஒழுங்கு
மாண்பு,என் றெல்லாம்
துகளறும்என் மனத்தெழுந்த
துளிர்ப்பன்றோ? தழைப்பன்றோ?
தொய்வில் லாத
வெருள் அரிமா வீறெல்லாம்
விளைவெல்லாம் இறையருள்தோய்
வேள்வி யன்றோ?
உகளறுமெய் பண்பறிவாய்
உலவும் உங்கள் உணர்வு உயிர்க்குள்
உள்ளேன் அம்மா!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/213&oldid=1447027" இலிருந்து மீள்விக்கப்பட்டது