பக்கம்:கனிச்சாறு 7.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  169


128

அவர்தாம் பீமராவ் அம்பேத்கர்!


தாழ்வுற்றுக் கிடந்திடும் மக்கள் எல் லார்க்கும்
தலைவராய்க் கொதித்தெழுந்து நின்றார் - ஒரு
தனியராய்ப் போராடி வென்றார் - அவர்
வாழ்வுற்று மேலேற
வழிவகுத்து உயர்வுபெற -
வாழ்வெல்லாம் போராடிச் சென்றார்! - இங்கு
வழியெல்லாம் சிலையாக நின்றார்!

அவர்தாம் பீமராவ் அம்பேத்கர்!
ஆரியத்தின் மேல்தொடுத்தார் அரிமாப் போர்!

அறிவுக்கு மாமலை!
அன்புக்குப் பழக்குலை!
உரிமைக்கு எரிமலை!
உழைப்புக்கு இரும்புவலை! (அவர்தாம்)

ஏழ்மையில் வாடினார்!
எதிரியைச் சாடினார்!
வீழாது போராடினார்! - அவர்
வெற்றியை முடிசூடினார்! (அவர்தாம்)

பட்டங்கள் பல பெற்றார்!
பல்கலை மிகக் கற்றார்!
சட்டங்கள் இந்தியர்க்குச் செய்தார் - அவர்
சாதிகள்மேல் அம்புகளை எய்தார்! (அவர்தாம்)

இழிவுகளின் வேரறுத்தார்!
ஏழ்மையர்க்கு நீர் உகுத்தார்!
பழிபுராண வேதங்கள் செய்த
பார்ப்பனர் மேல் போர் தொடுத்தார். (அவர்தாம்)

மக்களுக்குக் கற்பியுங்கள் என முழங்கினார் அவர்
மனங்கள் தெளிய அறிவு விளங்க நூல்கள் வழங்கினார்!
தக்கபடி உரிமை முழங்க அணிகள் திரட்டினார்:
தாழ்வு, அச்சம், மடமை, இழிவை அடித்து விரட்டினார்! (அவர்தாம்)

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/214&oldid=1447028" இலிருந்து மீள்விக்கப்பட்டது