பக்கம்:கனிச்சாறு 7.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


குன்று விரைவது போல விரைந்தது,
கொம்பு வளர்ந்தவோர் காளையும்;
சென்று வளைத்து மடக்கி யடக்கினன்,
செக்கச் சிவந்தவோர் காளையும்! 9

அஞ்சி நடுங்கிய வாறிருந்தேன்; அவன்
அண்டை வந்தே யெனை நோக்கியே,
“வஞ்சி நடுங்கிடல் ஏன்?” எனக் கேட்டனன்,
வாயின் நடுக்கங் காணாதவன்! 10

உள்ளத்தினைப் பறித்தான்; அவன் எண்ணத்தை
ஊன்றிவிட்டான் என துள்ளத்தில்!
அள்ளிப் பருகுநல் லின்பங் கொடுத்திடும்
ஆளானா னொரு நாளிலே! 11

வெல்லச் சுவைமொழி பேசியென் உள்ளத்தை
விண்ணுக் கழைத்திடும் பாவையே!
செல்லச் சுவைமொழி கொஞ்சி மகிழ்ந்திடச்,
சென்றன ஐந்தாறு பொங்கலும்! 12

பேழை திறந்தொளி முத்து வெளிப்படப்
போலச் சிரித்திடும் நங்கையே!
தாழை மலர்நிறத் தோடுனைப் பெற்ற, உன்
தந்தையை முன்னர் பெற் றேனடி! 13

ஞாயிறு வந்தது! திங்கள் வருமென
நாட்டங்கொண் டார்மனம் போலவே,
ஆயிரு பத்தைந்து பொங்கலுக் குள்ளேவுன்,
அத்தையைப் பின்னர்பெற் றேனடி! 14

பிள்ளை தவழ்ந்து நடந்து வளர்ந்திடப்
பொங்கல் ஐந்தாறு கழிந்தன!
பள்ளி சென்றான்; படித்தான், எனக் கூறிடப்
பாதி கடந்தது வாழ்வினில்! 15

கண்ணுக் கிணையெனக் காத்துவந் தேன்; அவன்
காளை நிகர்த்தவன் ஆகினன்!
‘பெண்ணுக் கழகது பேணல்’ என்றே எனைப்
பார்த்தவர் கூறிப் புகழ்ந்தனர்! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/219&oldid=1447035" இலிருந்து மீள்விக்கப்பட்டது