பக்கம்:கனிச்சாறு 7.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  175


வண்டு பறந்து வளைந்து திரிந்திடும்
வார்த்த மலர்க் கருந் தீங்குழல்
பண்டு நடந்த பழமை மறப்பது
போலக் கருமை மறந்ததே! 17

முல்லை முகையெனப் பேசி மகிழ்ந்திட்ட
முத்துப்பல் செத்து முடிவினில்,
‘இல்லை’யெனப் பிறர் பேசிக் களித்திட
ஏற்றதடி என்றன் தோற்றமும்! 18

சந்தனத் தூளினைப் பூசிக் கழுவிச்செந்
சாந்தினைப் பூசிக் குளித்தவள்,
குந்தி யெழுந்திடக் கோல் ஒன்று வேண்டிடுங்
கோணி வளைந்தவள் ஆயினேன்! 19

தாமரைச் செம்முகம் என்றும் இருகண்கள்
தாவிடும் வண்டுகள் என்னவும்,
தேமலர்ச் செவ்விதழ் என்னவும், இவ்வுடல்
தேன்சுவை மாநிறம் என்னவும், 20

பேசிப் புகழ்ந்திட்ட பொன்னுடலோ, இன்று
பேரொளி குன்றிட யாவரும்
ஏசித் திட்டி மகிழ் வெய்தும் நிலையினில்
ஏன்திரை யுண்ட தோ? கேளடி! 21

காலம் விரைந்ததுன் அத்தை யுளத்திற்குக்
காத்திருந் தானெரு காவலன்!
நீலமலர் விழிக் கானவன்; அன்னவன்
நேரிழை தொட்டிடும் மன்னவன்! 22

உன்னை மணந்திடப் பெற்றெடுத்தாள், ஓர்
ஓவியத்தை! இளங் கன்றினை!
மின்னை விரட்டிடும் சிற்றிடை நீ, எழில்
மேவி வளர்ந்திடும் பைங்கிளி! 23

பாலுலை யேற்றிச் சருக்கரை யிட்டின்பம்
பொங்கிடும் பொங்கல் அறுபதை
வாலைக் கன்னி! என்றன் வாழ்வில் கண்டே, உளம்
வீங்கி மகிழ்ந்திருந் தேனடி! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/220&oldid=1447036" இலிருந்து மீள்விக்கப்பட்டது