பக்கம்:கனிச்சாறு 7.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  187


143

சு. மன்னர்மன்னன் - சாவித்திரி.


பாச்சுவை மல்கிப் படர்ந்த பைந்தமிழ்
நாச்சுவை நல்கிய நற்கொழுங் கொம்பினைச்
செந்தமிழ்ப் பண்பெனுஞ் செறிமலர்க் கொடியொன்று
வந்து தழுவிய வகையினை வாழ்த்துவாம்!
அள்ளிய மகிழ்விற் கன்னவர் உடலும்,
தெள்ளிய கொள்கைக் கன்னவர் மனமும்
உரிமை ஆகுக; உழைப்ப தாகுக!
பெருமை பிறங்குக! திராவிடம் மீட்கும்
அருமை மக்களை அவர்பெற
ஒருமை யுளத்தோ டுவந்து வாழ்த்துவமே!

1955


144

க. பழனியப்பன் - செயமணி.


(நான்மணி மாலை)

இருவிகற்ப நேரிசைவெண்பா


பூத்துக் குலுங்குநகைப் பொற்றொடியைப் பூமார்பன்
காத்துக் கிடக்கும் கடிமணத்தை - ஏத்தியின்பம்
பெய்துவக்கும் உள்ளம்! பழனியப்பற் கம்மடந்தை
கொய்துவக்கும் கொய்யாக் கனி!

கட்டளைக் கலித்துறை


கனிமலி இன்சுவை காட்டியும் மென்மைக் கவினிதழாற்
பனிமலி இன்குளி ரூட்டியும் அன்புக் கொடிபிணித்தே
தனிநிலை இல்லறம் தந்தவன் தாட்குத் தலைவணங்கி
நனிமலி இன்பப் பெரும்பொழில் வாழ்வின் நலன்பெறுமே!

நிலைமண்டில ஆசிரியப்பா


‘பெறுவீ’ ரெனக்குறள் பேசும் முறையறிந்
தறிவறி மக்களை ஈனவும், அந்தமிழ்
நாட்டிற் குழைக்கவும், நலிந்தோர்க் கொருவழி
காட்டவும் கடிமலர்க் காநுழை பொறிஞிமி
றாகி இல்லறம் அணிபெற் றிலங்கவும்
பாகியற் பைந்தமிழ்ப் பாடலாற் பரவுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/232&oldid=1447082" இலிருந்து மீள்விக்கப்பட்டது