பக்கம்:கனிச்சாறு 7.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௩

கொள்கையை வகுத்துக்கொண்ட ஆசிரியர் தென்மொழியைக் காப்பதையே வாழ்வாகக் கொண்டு அவ்வாழ்வு தீர்ந்துவிடின் வேற்றுடலம் மாற்றிக்கொண்டு வருவேன் என்று தம் கொள்கை உறுதியை விளக்குகிறார், இப்பாட்டில்.

27. தமிழன்பர்கள் ஒரு சிலரின் மன வருத்தங்கண்டு, மனம் வருந்திப் பாடியது.

28. ஆசிரியரின் கொள்கை உறுதி முழக்கம் இது. அவரின் நன்றியுணர்வும் இதில் தெளிவாக உணர்த்தப் பெறுகின்றது.

29. ஆசிரியரின் தனிநிலை வாழ்க்கை அவரின் பொதுநிலை வாழ்வாக அமைந்த தன்மை பற்றியது இது. தமக்கிருக்கும் தனிநிலை உணர்வுகள் எப்படிப் பொது நிலை உணர்வுகளுடன் பொருந்தி இயங்குகின்றன என்பதை இப்பாடல் நன்கு விளக்குகிறது. இதுவும் ஒரு தன்னிலை விளக்கமே!

30. 1975–இல் இந்திய அரசியல் நெருக்கடி நிலையிலும், ஆசிரியர் பிரிவினைக் கருத்துகளைத் துணிந்து எழுதி வந்ததால் தென்மொழி இதழ் தடைப் படுத்தப் பெற்றதாகச் செய்தி வெளிவந்தது. அக்கால் ஆட்சியில் வீற்றிருந்தது கலைஞர் கருணாநிதியின் (அருட்செல்வரின்) அரசு. கலைஞர் கருணாநிதியையும் அவர் கட்சியையும் முந்தையப் பொதுத்தேர்தலின்பொழுது ஆதரித்தது தென்மொழி. ‘அதற்கு நன்றியாகவா கலைஞர், இதழைத் தடைசெய்தார்’ என்று கேட்டு எழுதிய பாடல் இது. தென்மொழி வெளிவராத பொழுது ஆசிரியரின் ‘தமிழ்ச்சிட்டு’ என்னும் சிறுவர் இதழே தென்மொழிபோல் வெளிவந்தது. அதில் தம் பணி தொடர்ந்து நடைபெறும் எனச் சூளுரைத்து வெளி வந்தது இப்பாடல்.

31. எண்ணங்கள் பல. அவற்றுள் எழுத்துகள் சில. அவற்றுள்ளும் செயலாக முகிழ்ப்பவை மிகச் சில. இவற்றுக்குள்ள இடைவெளிகள்தாம் எத்தனையெத்தனை?. இவற்றுள் நல்லவற்றையே கூறி நல்லவற்றையே செய்மின்கள் என்பது இப்பாடல்.

32. தென்மொழி இதழின் தொடக்கக் காலத்தில் ஆசிரியர்க்குத் துணையாக இருந்த அன்பர்களுள் சிலர், ஆசிரியரின் நடைமுறைகளாலும் மனவுணர்வுகளாலும் மாறுபட்டும் வேறுபட்டும் இயங்கினர். அவருள் ஒருவர் தம்பால் வரும் அனைவரிடமும் ஆசிரியரைக் குற்றங்குறைகூறி விரித்துரைப்பதும், அவரை மறைமுகமாகத் தாக்கியும் இழித்தும் தம் கட்டுரைகளிலும் பாடல்களிலும் எழுதி வருவதுமாக இருந்தார். அவரின் தவறான போக்கைச் சுட்டி எழுதியதாகும் இவ்வுருவகப் பாடல். இதில் அன்பரின் உள்ளச் சலிப்பும் வெறுக்கையும் நம்பிக்கையற்ற வெறுமைப் போக்கும் நன்கு சுட்டப் பெற்றுள்ளன.

33. ஆசிரியர் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகக் கூறுபவர்; எழுதுபவர். அத் தன்மையால் அவருக்கு மட்டுமின்றி, அவரைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும்கூடச் சிற்சில பொழுதுகளில் கேடுகள் நேர்ந்ததுண்டு. இப்பாடல் அவரின் மிகநெருங்கிய நண்பரொருவர் ‘இவர் நினைத்ததை யெல்லாம் எழுதிவிடுகின்றார்’ என்று வேறொருவரிடம் குறைகூறியது கேட்டு ஆசிரியர் மிக வருந்தி எழுதியது. இதில் நண்பர் கூறியதையே மறுக்காமல் உடன்பட்டு எழுதிய நயம் வியந்து சுவைக்கத்தக்கது.

34. ஆசிரியர் தம்மின் கொள்கைக்கு என்றும் அழிவில்லை என்பது பற்றிய பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/24&oldid=1445491" இலிருந்து மீள்விக்கப்பட்டது