பக்கம்:கனிச்சாறு 7.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  195


151

இளஞ்செழியன் - முல்லைவடிவு.


எந்தமிழ் நெஞ்சத் திளஞ்செழிய! தாங்களின்று
முந்தில் லறம்காண முல்லை வடிவின்கைப்
பற்றிடப் போகும் பனிபோன்ற செய்திசெவி
யுற்றிட என்னுயிர் உள்ளம் உடலெல்லாம்
பூரித்து நின்றேன்; பூந்தமிழால் வாழ்த்துகின்றேன்.

நேரிழை நற்றோளும் தங்கள் நெடுந்தோளும்
எந்தமிழ் அன்னைக்கும் நாட்டுக்கும் மக்கட்கும்
தந்த பெருஞ்சீர் அளக்கத் தகாதென்றே
வாய்விட்டுக் கூறுநாள் வந்தெய்தின் இவ்வாழ்க்கை
காய்விட்டு நன்றாய்க் கனிந்ததென நானுரைப்பேன்.
அந்நாளை நோக்கி அறஞ்சேர் நடையிடுங்கள்!
எந்நாளும் வாழ்க இனிது!

-1969


152

சி. இராமச்சந்திரன் - பார்வதி.


பேரன் புடையீர்!
                                            வணக்கம் பிறங்குதிரு
வள்ளுவ ராண்டு, வயங்குஈரா யிரத்தொன்று,
விள்ளுகின்ற வைகாசி என்னும் விடைத்திங்கள்,
இருபத்து நான்காம்நாள் எழுந்த முழுத்தத்தில்,
திருவொத்து வாழும் திருச்சிராப் பள்ளிக்
கருவைத் திருநகருள், காலிட்ட பந்தரில்
இருங்கொண்ட மரபினோர் இராம சாமியின்
பெறலருங் செல்வி பார்வதி தன்னைப்
பால்வழி யறிந்து பயில்வறத் தெளிந்து
நூல்வழி யொழுகிய நுண்மையோர் அமர்ந்த
மன்றினுள் வைத்து மணங்கொள் நிகழ்வையும்
என்றும் யாம்புகும் இனியஇல் லறத்தையும்
நின்று பரவவும் நீடுமணம் கொழுவவும்
அன்றுயிர்த் தெழுந்து ஞாலத்து அறந்தூவும்
செந்தமிழால் வாழ்த்திச் சிறப்பு செய்தற்கே
வந்தருள வேண்டி வணங்கும், தமிழன்பன்,

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/240&oldid=1447110" இலிருந்து மீள்விக்கப்பட்டது