பக்கம்:கனிச்சாறு 7.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


158

கோ. இளவழகன் - வளர்மதி.


உரத்த நாடென்றன் உயிரில் தோய்ந்தது!
அரத்தக் கலப்பென ஆங்குயிர்த் திருக்கும்
உண்மை உளங்கள் ஒன்றிரண் டிற்குள்
திண்மை உணர்வும் தேர்ந்த கொள்கையும்
இன்பத் தமிழ்க்கும் எனக்கும் உதவும்
அன்புச் செறிவும் அமைந்திருக் கின்ற
இளவழ கன்எனும் ஏந்தலுக் கிருக்கும்
உளவழ கென்னால் உணர்த்துவ தரிது!

அத்தகு அருமைத் திருவுள் ளத்துடன்
ஒத்தகு புதுமை உள்ளமொன் றிணையும்
திருமண விழாவோ தீந்தமிழ் மணக்கும்
பெருமண விழாவாம்! பீடுசேர்ந் தியங்கும்
அவ்விழா தன்னில் ஆருயிர் போலும்
செவ்விய அறிவும் அன்புச் செழுமையும்
கொண்ட உளங்கள் கூடுவ தென்னில்
கண்ட விழிக்கோர் காட்சியும் வேண்டுமோ?

உறையெழி லெல்லாம் உளத்துத் திரண்ட வோர்
இறையெழில் என்னும் இணையிலா ஏந்தலும்
முரசறை வதுபோல் முத்தமிழ் முழக்கம்
அரசிறை வனெனும் ஆன்ற அறிஞனும்
ஒன்றிய உளங்கள் ஓரா யிரமும்
நன்றிப் பெருக்கொடு நாடிவந் திணைந்து
வாழ்த்துவ தென்னில் வரவிய லாவென்
காழ்த்த உளமும் கலந்தினி தாங்கு
வந்திருந் தவர்க்கு வாழ்த்துரைக் காதோ?
செந்தமிழ்த் திருவெலாம் சேர்ந்த திருமண
நிகழ்ச்சியில் என்னுடைய நெஞ்சமும்
புகழ்ச்சி கூறிப் பொலிவுற வாழ்த்துமே!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/245&oldid=1447118" இலிருந்து மீள்விக்கப்பட்டது