பக்கம்:கனிச்சாறு 7.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


164

அறிவுச் செல்வன் - கல்யாணி


அறிவுச் செல்வன்,கல்யாணியோ
டகம் பொருந்தினன் வாழ்கவே!
செறிவுத் தமிழும் செழித்ததங்கே!
சிறப்பும் நலமும் சூழ்கவே!

நினைவும் செயலும் கமழ்ந்தினித்தன!
நெடிய வாழ்வும் மலர்ந்தது!
தினையும் தேனும் பிசைந்ததைப்போல்
திருவும் உருவும் கலந்தன!

அறத்தின் வாழ்வை அவர்கள் ஏற்றனர்,
ஆயிரம் ஆண்டு நிலைத்திட!
புறத்தின் காட்சி மறைந்து போனது,
புலன்கள் இன்பம் விளைத்திட!

மகிழ்ச்சிப் பூக்கள் அரும்பவிழ்ந்தன!
மலர்ந்த கொடியும் நிறைந்தது!
புகழ்ச்சி மொழியில் செவி குளிர்ந்திடப்
புதுமை இன்பம் உறைந்தது!

இளமை அருவி, தென்றல் குளிரில்
இணைந்து பொங்கி அவிழ்ந்தது!
வளமை! இனிமை! அமிழ்தச் சுவைகள்!
வாழ்க வாழ்க வாழ்கவே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/249&oldid=1447125" இலிருந்து மீள்விக்கப்பட்டது