பக்கம்:கனிச்சாறு 7.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


171

தென்மொழி ‘நூல்நிறை’ பகுதிக்கு
முன்னுரை!


அச்சாகும் நூலெல்லாம் நூலாமோ? ஆங்குசிலர்
மெச்சியுரை செய்திடலால் மேலாமோ? முச்சில்
புடைத்துலையி லிட்ட புதுமணலைச் சோறாய்ப்
படைத்துவிட லாமோ பசிக்கு?

-1964


172

தமிழ்ச்சிட்டு இதழின் முகப்புப் பாடல்!


இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு!
இன்றைய சிறுவர் நாளைய உலகம்!
நன்று செய்வதே நமக்குநல் வாழ்க்கை!
என்றும் அழியாது இருப்பது புகழே!

-1966


172

‘மறைந்து வரும் தமிழ்ச்சொற்கள்’
பகுதிக்கு முன்னுரை!


சோம்பல், அடிமை, அறியாமை யால்தமிழை
ஓம்பல் குறைவால் உலகவழக் கற்றொழிந்த
பைந்தமிழ்ச் சொற்கள் பலகோடி! ஈங்கதனால்
நைந்த தமிழர் நலிவு பலகோடி!
இன்று விழித்தோம், இனியேனும் செந்தமிழை
நன்றாகப் பேணிவர நாம்முனைவோம்; நாற்புறமும்
சென்று மறைந்துவரும் செந்தமிழ்சேர் சொற்களை
ஒன்றுதிரட்டி, உரியபொருள் ஆய்ந்தெழுதி
இப்பகுதிக் கேவிடுக்க; ஏற்றம் பயின்றிடுக,
செப்பம் மொழிக்குச் சிறப்பு!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/255&oldid=1447133" இலிருந்து மீள்விக்கப்பட்டது