பக்கம்:கனிச்சாறு 7.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  215


செந்தமிழுஞ் செங்கதிரால்; சீர்சால் திருக்குறளும்
அந்தமிழால் வீசும் அணிமதியால்; அந்தமதிக்
கெட்டிநடை யிட்டவறி வேற்றமே பாவாணர்
ஒட்டிநடை யிட்ட உரை. 8

செப்பா லடித்தவொரு காசுக்குச் செந்தமிழை
எப்பாலும் விற்கும் இழிஞரிடை,முப்பாலுக்
கொத்த மரபுரையொன் றோதினார் பாவாணர்க்
கொத்த கடனென் றுணர்ந்து. 9

தேவநே யன்என்னுந் தேர்ந்தமதிப் பாவாணர்
தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை - மேவியபின்
மற்றோர் உரைசெயவும் மானுவரோ? மானுவரேல்
கற்றோர் நகைப்பர் கலித்து. 10

-1970


180

கற்பனை ஊற்று - படையல்!


அன்பிருந்த நெஞ்சம்!
அகலாதொன் றாய்வளர்ந்து,
தென்பூட்டி என்னைத் தெளிவித்த நல்லதுணை!
முன்பிறந்தாள்; வாழ்ந்தாள்!
முழுவாழ்க்கை வாழ்வதற்கு
முன்பிறந்தாள்! - "உன்றன்
முதுமையெல்லாம் தாண்டிவந்து,
பின்பிறப்பாய்”- என்றெனக்குப் பேறு தந்தாள்!
யானவட்குப்
பின்பிறப்பாய்த் தோன்றியதால்
பின்பிறப்ப தென்றுலகில்
நின்றிருந்து விட்டேனோ?
நேர்ச்சி புரியவில்லை!
அன்றிருந்தாள் போல “அருகிருக்கின் றாள்” - என்றே
இன்றும் இருப்பேன்! இராசம்மாள் தூய்நெஞ்சோ
டொன்றிக் கலந்ததிவ் வூற்று!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/260&oldid=1447140" இலிருந்து மீள்விக்கப்பட்டது