பக்கம்:கனிச்சாறு 7.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


184

செங்கை அழகனின் ‘ஆயிரம் மலர்கள்’ பாடல்
நூலுக்கு ஊக்கவுரை.


பண்டை யிருந்தே பாவலர்க்கும் பூக்களுக்கும்
பெண்டிற் கிருக்கும் பெருந்தொடர்பை விஞ்சுமா
றுண்டு தொடர்பு; இங் கோரா யிரமலரைக்
கண்டு நுகர்ந்து கவினுரைத்தார் பாவலர்கள்!
செங்கை அழகன் சிறந்த தமிழுணர்வில்
பொங்கி யெழுந்த புதுமுயற்சி இப் படைப்பு!
பாவலரை ஊக்குவித்துப் ‘பாடுமின்கள் பூக்கள்’ என்றார்
ஆவலினால் செந்தமிழுக் காக்கமெனப் பாவலரும்
கோட்டுப் பூ, மற்றும் கொடிநிலநீர்ப் பூக்களெனப்
பாட்டிலக்கி யத்திற்குப் பன்மணத்தைப் பூசிவிட்டார்!
ஊடே இலைசிலவும் உண்டெனினும் நல்லமலர்க்
காடாகும் இத்தொகுப்பு! கண்டு நுகர்ந்திடுக!
நல்ல முயற்சி! நலம்நினைந்து போற்றிடுக!
வல்ல புலவர்க்கெம் வாழ்த்து!

-1974


185

‘வண்ணச்சிறகு’ இதழ்க்கு வாழ்த்து!


வண்ணச்சிறகு வலவன் உள்ளத்தின்
எண்ணச் சிறப்பை எடுத்து விளக்கி
மீண்டும் பறந்து தமிழின் மேன்மைக்கு
யாண்டும் உழைத்திட யாப்பும் உரையுமாய்ப்
பாடிக் களிக்குமாம்! பைந்தமிழ் வலவன்
தேடிக் கிடைத்தஓர் தீந்தமிழ்த் தொண்டன்!
ஈங்கிவர் முயற்சியும் இணையிலாத் தொண்டும்
நீங்கிடாக் கிடைத்த நெடுமழை, தமிழ்க்கே!
வலவன் வாழ்க! அவர் வண்ணச் சிறகும்
இலகுசெந் தமிழ்போல் யாண்டும் திகழ்கவே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/263&oldid=1447144" இலிருந்து மீள்விக்கப்பட்டது