பக்கம்:கனிச்சாறு 7.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


எழுந்த தனித்தமிழ் எனுமிந் நூலினால்
விழுந்த தமிழினம் விழிப்புற் றெழுதலும்
இழந்த பழம்புகழ் இனிமேற் புதுக்கலும்
உழந்த பெருந்துயர் ஒதுக்கிச் சிறத்தலும்
நேர்ந்திடல் உறுதி! நெடும்பயன் வந்து
சேர்ந்திடல் உறுதி; தனித்தமிழ் சிறக்கவே!

1978


187

பாவலர் முல்லைவாணனின்
குழந்தைப்பாடல் தொகுதிக்கு மதிப்புரை!


சிங்கைவாழ் முல்லை வாணன்
செழுந்தமிழ் மொழியில் உள்ளம்
பொங்கிடக் குழந்தை கட்குப்
புதுப்பாடல் தொகுதி தந்தார்!
எங்குளார் தமிழர் அங்கே
இவர்பாக்கள் முழங்கும்! முன்னர்
மங்கிய வளங்கள் எல்லாம்
மலர்ந்திடும் தமிழர் வாழ்வில்!

வளர்கின்ற குழந்தை வாயில்
தாய்த் தமிழ் வளர விட்டால்
தளர்கின்ற தமிழின் நாட்டம்
தழைந்திடும் அன்றோ? நெஞ்சில்
விளைக்கின்ற தமிழு ணர்வால்
நல்லறம் விளையும் அன்றோ?
களர்நிலம் நன்செய் யாகக்
காண்பது பெருமை யன்றோ?

பாவலர் முல்லை வாணன்
பாடல்கள் எல்லாம் நல்ல
தூவளர் தமிழில் அன்பு
துலங்கிடச் செய்தல் உண்மை!
ஆவலால் குழந்தை கட்கே
அழகிய தலைப்பில் இன்பம்
மேவுறும் பாக்கள் தந்தார்!
மேன்மையுற் றென்றும் வாழி!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/265&oldid=1447147" இலிருந்து மீள்விக்கப்பட்டது