பக்கம்:கனிச்சாறு 7.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  221


188

மலேசியப் பாவலர் பொன்.அன்பரசனின்
‘உதிரிப் பூக்கள்’ பாடல் நூலுக்கு மதிப்புரை!


‘உதிரிப் பூக்க’ ளென் றொருபெய ரிட்டுக்
கதிரில் மணிகளாய்க் கருத்துகள் நிறைத்தே
ஆக்கம் மிகுந்திட அழகுத் தமிழில்
தேக்கிய தேன்குடம் திறந்தது போலப்
பொன்.அன் பரசன் புதுமை உணர்வொடு
நன்னறும் பாக்கள் நயந்திடத் தந்தார்!

தந்த பாக்களில் தனித்தமிழ் ஒளிர்ந்தது!
அந்தத் தமிழினில் அவரது நெஞ்சின்
தூய உணர்வு துளும்பி வழிந்தது!
மாயாக் கொள்கை மலையென நின்றது!
பீடுடை வாழ்க்கைப் பெருமிதம் தெரிந்தது!
நாடென இனமென மொழியென அவர்செய்
ஓலமும் அங்கே ஓங்கி ஒலித்தது!
கோலமெல் லாமும் செந்தமிழ்க் கோலம்!

சிற்சில இலக்கணப் பிழைகள் இடையிடைக்
கற்சில் கள்போல் கண்களை உறுத்தின.
ஏய்ந்திடும் அச்சுப் பிழைகளும் இருந்தன.
ஆயினும் ‘தென்மொழி’ அளாவிய நெஞ்சின்
உணர்வின் மிகுதியால் உழுவலன் பரசன்
புணர்த்த பாக்கள் ஆகலின் புசித்தேன்!
உதிரிப் பூக்களில் ஊறிய தமிழ்த்தேன்
எதிரி நாவினும் இனிக்கும் தகையது!
மலேசியப் பாவலர் பொன்.அன் பரசன்
குலாவிய தமிழால் இன்பம் கொழிக்கவே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/266&oldid=1447149" இலிருந்து மீள்விக்கப்பட்டது